தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பை வலிமை வாய்ந்ததாக மாற்ற வேண்டும்: பிரதமர் மன்மோகன்சிங்
புதுச்சேரி: ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் நிழலிலிருந்து தற்காத்துக் கொள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தெற்காசிய கலாச்சார படிப்பு மையத்தை திறந்து வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
புதுவையில் அமைந்துள்ள தெற்காசிய கலாச்சார கல்வி மையம் மூலம் தெற்காசிய மக்களுக்கு இடையே கலாசாரம், பண்பாடு, தொடர்பு, புரிதலுக்கு அடித்தளமாக அமையும். உலகம் தற்போது சிக்கலான காலத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியை பிராந்திய கூட்டுறவு மூலமாக அந்த நாடுகளின் அறிவார்ந்த தலைவர்கள் தீர்த்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.
அதன் விளைவுகள் இந்தியாவுக்கு பல்வேறு படிப்பினையை தந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி நிழல் விழாதவாறு தெற்காசிய நாடுகளுக்குள் ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பை நல்ல ஒருங்கிணைந்த வலிமை வாய்ந்த கூட்டமைப்பாக மாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது.
சார்க் மேம்பாட்டு நிதியம் மூலமாக சமூக ரீதியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு, எரிசக்தி, குடிநீர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தெற்காசிய நாடுகளுக்குள் உறுதியான புரிந்துணர்வு அவசியம் ஆகும். தெற்காசிய பல்கலைகழகத்தின் வாளகம் ஒன்று டெல்லியில் விரைவில் அமைக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications