For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் பிரசவ கால மரணங்கள் அதிகரிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Maternal Death
இந்தியாவில் பிரசவத்தின்போது ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு கர்ப்பிணி பெண் மரணம் அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் உரிய வசதியும், கர்ப்பிணிகளுக்கு சரியான ஊட்டச்சத்துணவு கிடைக்காததுமே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தாய்மை அடையவேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் வேண்டும் வரம். அதுவே சிலருக்கு சாபமாகிப் போகிறது. உரிய மருத்துவ வசதி கிடைக்காமல், சரியான ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணித்தாய்மார்கள் மரணத்தை தழுவுகின்றனராம். இது எங்கோ அல்ல சந்திராயானை ஏவுகிறோம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தியாவில்தான்.

கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா.சபை இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் 57 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் மரணமடைந்தது கண்டறியப்பட்டது.இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பிரசவத்தின்போது 10 நிமிடத்துக்கு ஒரு கர்ப்பிணி பெண் இறந்துபோவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு காரணம் கிராமப்புற பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லாதது தான். இன்றைக்கு பல கிராம சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், நர்சுகள் இல்லை. பெண்களுக்கு பிரசவ வலி இரவு நேரத்தில் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி பெண்கள் பலர் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது ஏதாவது சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட பெண்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் கிராமத்து பெண்கள் பலருக்கு சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அவர்களின் உடல் பிரசவத்தை தாங்கக் கூடிய சக்தியை இழந்து விடுகிறது என்கின்றது ஐ.நா அறிக்கை

பிரசவகால மரணங்கள் அதிக அளவில் ஏற்படுவது பீகார், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அந்த மாநிலங்களில் நிலவும் வறுமை, சுகாதாரமின்மை, தண்ணீர் என்றும் ஐநா சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா.சபை ஆராய்ச்சியாளர் பிரடெரிகா, இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டும்தான் மருத்துவ வசதி உள்ளது. கிராமப்புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தினால் மட்டுமே பிரசவகால உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இன்றைக்கும் இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சரியான மருத்துவ வசதியோ, சாலை வசதியோ கிடைக்காமல்தான் இருக்கின்றனர். இதுவே பிரசவகால மரணத்திற்கும் காரணமாகிறது. எனவே இதுபோன்ற மரணங்களை தடுக்க கிராமங்களில் சரியான மருத்துவ வசதியை ஏற்படுத்தவேண்டும். வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கர்ப்பிணிகளுக்கு சரியான ஊட்டச்சத்துணவை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

English summary
India is likely to miss the Millennium Development Goal (MDG) related to maternal health as one maternal death is being reported every 10 minutes in the country now. India recorded around 57,000 maternal deaths in 2010, which translate into a whopping six every hour and one every 10 minutes, UN data in this regard says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X