என்ஜினீயரிங் கவுன்சிலிங் மூலம் விளையாட்டு கோட்டாவில் 500 சீட்கள்- ஜெ உத்தரவு
சென்னை: தமிழகத்தில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில், என்ஜினீயரிங் படிக்க விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு கவுன்சிலிங்கில் 500 சீட்கள் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், நேர்மையாக செயல்படும் தன்மையையும், வெற்றியையும், தோல்வியையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தையும் அளிக்கக்கூடியது விளையாட்டு.
இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 1992ம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற ஒரு ஆணையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார்.
மேலும் இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்குதல், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் சாதனைகள் புரிந்திடும் வகையில் பல்வேறு ஊக்க உதவிச் சலுகைகளை வழங்குதல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2002ல் ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்க ஆணையிடப்பட்டது. சென்ற ஆண்டு இந்த ஊக்கத் தொகையை இரட்டிப்பாக்கி உத்தரவிட்டார்.
அதிகரித்து வரும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தற்போது விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வின் மூலம் நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டு வரும் 100 இடங்கள் ஒதுக்கீட்டை, இந்த ஆண்டு முதல் (2012-13) 500 இடங்களாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பன்னாட்டு, தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள வழி காட்டுநெறிகளின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்காக அரசால் நடத்தப்பெறும் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் 500 இடங்கள் ஒதுக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை, மேலும் பல இளைஞர்களை விளையாட்டில் ஆர்வம் கொள்ள செய்வதோடு, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், அவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்பளிக்கவும் ஏதுவாக அமையும்.
இதன் மூலம், தமிழக மாணவச் செல்வங்கள் கல்வி, விளையாட்டு என்று அனைத்து துறைகளிலும் ஒளிர்ந்து மிளிர வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications