For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புலிகளுக்காகத்தான் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிஞ்சிக்கிட்டா சரி!'

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: புலிகளுக்காகத்தான் 1991-ல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி:
முல்லைப் பெரியாறு குறித்து நீதியரசர் ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கை ஒரு தலைப்பட்சமாக உள்ளது என்றும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், புதிய அணை கட்டப்பட்டே தீர வேண்டுமென்றும் உம்மன் சாண்டி கூறியிருக்கிறாரே?

பதில்: புதிய அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழ்நாடும் உறுதியாக இருக்க வேண்டும்.

கேள்வி: இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்கக்கூடாது என்று நீங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்களையெல்லாம் மத்திய அரசு திரும்ப அனுப்பி விட்டது. அவர்களுக்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்?

பதில்: அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம்.

கேள்வி: டெசோ மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள தமிழ் எம்.பி.க்களையும் அழைப்பீர்களா?

பதில்: அழைப்போம்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

முன்னதாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்திலே பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, 3-2-2009 அன்று தமிழக அரசின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பை நினைவுபடுத்துகிறேன். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்திலுள்ள வான்படை பயிற்சிக் கூடத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிவு வழங்குமாறும் தாம்பரம் வான்படையினர் சேலையூர் காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்ட செய்தி அறிந்து, முதல் அமைச்சர் அறிவுரைப்படி தலைமைச் செயலாளர் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்பு கொண்டு, அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு அந்த இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களை தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தச் செய்தியை முதல்-அமைச்சருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது. இதிலிருந்தே இதேபோன்ற சம்பவம் தி.மு.க. ஆட்சியிலே நடந்தபோது எந்த அளவிற்குச் செயல்பட்டோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்றபோது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நீங்கள் மத்திய அரசை எதிர்த்து ஆட்சியை இழந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களே, 1991-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்ததற்குக் காரணம், விடுதலைப்புலிகளை நீங்கள் ஆதரித்தீர்கள் என்பதுதானே?

பதில்: 4-7-2012 தேதிய 'ஆனந்த விகடன்' இதழில், 'அபாண்டமாக பழி சுமத்தி தி.மு.க. ஆட்சியைக் கலைத்தீர்கள் என்று உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்' என்று சுப்பிரமணிய சாமியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், "தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப்புலிகளுக்கு கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சுக் கொடுத்தா. விடுதலைப்புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்குற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது.

நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, கருணாநிதி, தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றா. அவா அரசைக் கலைச்சிடுவோம்னு சொன்னேன். அவர் பயந்தார். சுத்தி இருந்தவாள்லாம், இந்தக் காரணத்துக்காக அரசைக் கலைச்சா, தமிழ்நாட்டில் பெரிய கலவரம் வெடிக்கும்னு பயமுறுத்தினா. அதெல்லாம் ஒன்ணும் ஆகாது, கலைங்கோன்னு தைரியம் கொடுத்து நான்தான் கலைக்க வெச்சேன். அதில் என்ன தப்பு?" என்று சொல்லியிருக்கிறார்.

அவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையோ இல்லையோ; அதற்காகத்தான் தி.மு.க. பதவியை இழந்தது. இதிலிருந்தாவது ஒரு சிலர் வேண்டுமென்றே என்மீது பழி போடுகின்ற செயலை நிறுத்திக் கொண்டால், அதைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், அதுவே போதுமானது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
DMK president M Karunanidhi told that there is a chance made by Subramanya Swamy to understand the people that the DMK lost its govt just because of LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X