For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை பிரித்து ஈழம் அமைக்க முயன்றதாக விடுதலைப்புலிகள் மீது பொய் குற்றம் சுமத்திய மத்திய அரசு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தங்கள் தாயகமாம் தமிழ் ஈழ விடுதலைக்கு மகத்தான தியாகம் செய்து போராடிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் பிரித்து ஈழம் அமைக்க முயன்றனர் என்ற அபாண்டமான பொய்யை மெய்யமாக்கி புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈழத் தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் வார்த்தைகளால் விவரிக்க இயலாத வகையில் கற்பழித்து நாசம் செய்து கோரக் கொலை புரிந்தனர். ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப்பேரை கண்களை, கைகளை கட்டி நிர்வாணமாக இழுத்துச் சென்று, சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற காட்சி மனிதாபிமானம் உள்ளவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும்.

சிங்கள அரசின் இனக் கொலை குற்றத்தினை அனைத்து உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனும் கோரிக்கை சர்வதேச அரங்கில் வலுப்பெற்று வரும் நிலையில் உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவ முற்போக்கு கூட்டணி அரசு கொடியவன் ராஜபக்சேவையும், அவனது அமைச்சர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்கிறது.

சிங்கள ராணுவத்தினரையும் அழைத்து வந்து பயிற்சி கொடுக்கிறது. சிங்கள அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக சிங்கள அரசுக்கு, இந்திய அரசு பல துறைகளிலும் உதவி வருகிறது.

இலங்கைக்கு மின்சாரம் வழங்க கடல் வழியில் கேபிள்களை பதிக்கிறது. சிங்களவனுக்கு உதவவே தமிழ்நாட்டில் பெரம்பூரில், தமிழர்களின் வியர்வையில் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளை அனுப்பி வைக்கிறது. இதன் பின்னர் சிங்கள விமானப்படையினரை தமிழ்நாட்டிலிருந்து, பெங்களூருக்கு கொண்டு சென்று எலகங்கா தளத்தில் பயிற்சி அளிக்கின்றனர். இது மத்திய காங்கிரஸ் அரசின் ஆணவத்தின் அராஜக போக்கின் வெளிப்படாகும்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூரை அடுத்த வெலிங்டனில் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரியில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கெடுக்க சிங்கள ராணுவத்தின் ஒரு கடற்படை அதிகாரியையும், தரைப்படை உயர் அதிகாரியையும் இந்திய அரசு வரவழைத்து ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து விருந்தும் கொடுத்தது. இச்செய்தி அறிந்தவுடன் அவர்களை வெளியேற்ற சொல்லி, அறப்போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கள ராணுவத்தினரை இங்கே வரவேற்பதும், உபசரிப்பதும் இந்திய அரசு தமிழர்களுக்கு செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகங்கள் ஆகும். தங்கள் தாயகமாம் தமிழ் ஈழ விடுதலைக்கு மகத்தான தியாகம் செய்து போராடிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் பிரித்து ஈழம் அமைக்க முயன்றனர் என்ற அபாண்டமான பொய்யை மெய்யமாக்கி புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

தமிழ் குலத்திற்கு இந்திய அரசு செய்து வரும் அனைத்து துரோகங்களுக்கும் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் நிரந்தர பொறுப்பாளிகள் ஆவார்கள். தாய் தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டு, நம் தலையிலேயே மிதிப்பது போன்ற மத்திய அரசின் அராஜக போக்கை நீண்ட காலத்திற்கு இனியும் மூடி மறைக்க முடியாது. வரலாறு மன்னிக்காது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வி்டுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு பழ.நெடுமாறன் கண்டனம்:

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறி விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறி விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி வரும் நிலையில் தமிழீழம் அமைக்க புலிகள் போராடி வருகின்றனர். இதனால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் எப்படி அபாயம் ஏற்படும் என்பது புரியாத மர்மமாகும். இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் உதவி பெறுவதில்லை என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர்.

புலிகள் வலுவுடன் இருந்தவரை இலங்கையில் எந்த வெளிநாடும் காலூன்ற முடியவில்லை. இப்போது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு காலூன்றிவிட்டன. புலிகள் வலுவுடன் இருந்தபோது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரால் தாக்க முடியவில்லை. ஆனால், இப்போது நமது மீனவர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனை உணராமல் விடுதலைப் புலிகளை எதிரியாகக் கருதுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko condemned the centre for extending the ban on LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X