For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவுடிகளிடம் தங்க நாணயம் வசூல்: கிருஷ்ணகிரி மாஜி எஸ்பி, மனைவியிடம் விடிய விடிய விசாரணை

By Chakra
Google Oneindia Tamil News

Abhishek Dixit
கிருஷ்ணகிரி: 87 போலீசாரிடம் பணம் பெற்றுக் கொண்டு டிரான்ஸ்பர் உத்தரவுகளை அள்ளித் தந்தது, துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளான 45 போலீசார் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தது, பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனியைக் கொலை செய்த குற்றவாளிகளை பணம் வாங்கிக் கொண்டு காப்பாற்ற முயன்றது, தனது பிறந்த தினத்தன்று போலீஸாரிடம் இருந்தும் பொது மக்கள், ரவுடிகளிடம் இருந்தும் கட்டாயப்படுத்தி தங்க நாணயங்களை வசூலித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சென்னை கமாண்டோ பிரிவு எஸ்பி அபிஷேக் தீக்ஷித், அவரது மனைவி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த அபிஷேக் தீக்ஷித், சென்னை கமாண்டோ பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த காலத்தில் 87 போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவை வழங்கினார். அதில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு ஓசூரில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமச்சந்திரன் இடைத்தரகராக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

கடந்த மாதம் 5ம் தேதி ஓசூர் அருகே பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுட்டும், தலை துண்டித்தும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது எஸ்பியாக இருந்த அபிஷேக் தீக்ஷித் கொலையாளிகளை பிடிக்க 12 தனிப் படைகளை அமைத்தார். ஆனால், குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் தீவிரமாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

மேலும் தனது பிறந்த தினத்தன்று மாவட்ட போலீஸாரிடம் இருந்தும் பொது மக்கள், ரவுடிகளிடம் இருந்தும் தங்க நாணயங்களை கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார்.

இது தவிர துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளான 45 போலீசாரிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளார்.

இவ்வாறு பல புகார்கள் குவிந்ததையடுத்தே அவர் சென்னை கமாண்டோ பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே போல இவருக்கு உடந்தையாக இருந்த 'புரோக்கர்' சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனும் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந் நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பங்களாவில் (இதை இன்னும் அபிஷேக் காலி செய்யவில்லை). சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் பர்கூரில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வீடு, அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் நகைக் கடை, மற்றும் அபிஷேக் தீக்ஷித்தின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது உறவினர்களின் 3 வீடுகள் உள்பட மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல முக்கிய சொத்து ஆவணங்களும், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ. 15 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அபிஷேக் தீக்ஷித் கிருஷ்ணகிரிக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் அவரது மனைவியிடமும் நேற்று முன்தினம் இரவு முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடமும் விசாரணை நடந்தது.

கிருஷ்ணகிரி ஹவுசிங் போர்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

நேற்று அதிகாலை 4 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை கிருஷ்ணகிரி ஹவுசிங் போர்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்ஷித், அவரது மனைவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

English summary
As part of an investigation against former Superintendent of Police Abhishek Dixit, several teams of the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) carried out from early morning on Monday raids in the official residence of the Superintendent of Police on Old Bangalore Road and the house of P. Ramachandran, Sub-Inspector with the traffic wing at Bargur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X