தனி ஈழம் கோரும் வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வலுசேர்ப்பதுதான் டெசோ: மகிந்த ராஜபக்ச

குருவிட்ட ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக மகிந்த ராஜபக்ச பேசியதாவது:
சிங்கள ராணுவத்தினர் ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைக் கொள்கையையும் ஏந்தி போரில் ஈடுபட்டனர். மஹா போதி விகாரை, தலதாமாளிகை, மடுதேவாலயம், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இப்போது பாதுகாக்கப்பட்டு சுதந்திரமாக வழிபடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
80 விழுக்காடு இயல்பு வாழ்க்கை திரும்பியது
21,000 க்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களும் தற்போது படையினரைப் போல பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இப்போது அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவதும் படையினரின் அளப்பரிய பங்களிப்பால் தான். இன்று வடக்கில் 80 விழுக்காடு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
டெசோ மாநாடு
நாற்பது வருடங்களுக்கு முன் வட்டுக்கோட்டையில் தனி நாடு யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதற்குத் துணை போகின்ற மாநாடு நடத்தப்பட்டு (டெசோ) யோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளின் பின்னணியில் இருப்பது தனியான ஒரு நாடு அமைக்கப்பட வேண்டும் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஈழத்தை ஆதரிக்கும் இத்தகைய மாநாடுகளுக்கு சென்று வந்தவர் இந்தியாவை விமர்சித்தார். இலங்கையில் ஈழம் அமைக்க நினைத்த அவர்கள் அத்தோடு அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இது தான் உலகின் இன்றைய நிலை என்பதை நாம் உணர வேண்டும். வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப்பட்டால் பரவாயில்லை. எமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை, எமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர்சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. ஈழம் கோருபவர்கள் எம்மிடம் எதிர்பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications