For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்சார மீட்டர் கட்டணத்தையும் 3 மடங்கு உயர்த்த அரசு திட்டம்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: தமிழகத்தில் நடந்த குரூப் 2 தேர்வு வினாத் தாள் வெளியான விவகாரத்தில் பெரிய தவறினை மறைக்க முயற்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: அரசுத் தேர்வாணையக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாகத் தேர்வு நடத்தப் போவதாக அறிவிப்பு வந்துள்ளதே, கேள்வித்தாள் தேர்வாணையக் கழகத்திலிருந்து வெளியாகக் காரணமாக இருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாதா?

பதில்: குரூப் 2 தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதி முடித்து விட்டார்கள். அந்தத் தேர்வின்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கேள்வித்தாள் முன்னரே வெளியாகியுள்ளது. ஆனால் கேள்வித்தாள் வெளியானது பற்றி புகார் கொடுத்தவர்களைத் தான் அதிலும் ஒரு தலித் பெண்ணையே அரசு கைது செய்துள்ளது.

தேர்வாணையக் கழகத்தின் தவறு காரணமாகத்தான் வினாத்தாள் வெளியாகி இருக்கிறது. அதற்காக முறையாகக் குற்றஞ்சாட்ட வேண்டுமென்றால் தேர்வாணையக் கழகத்தில் பொறுப்பேற்றிருப்பவர்களைத் தான் குற்றஞ்சாட்ட வேண்டும். ஆனால், வேறு யார் யார் மீதோ அரசு நடவடிக்கை எடுத்து, குற்றத்தை மறைப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளது.

பெரிய தவறினை மறைப்பதற்கான முயற்சி:

தவறைச் செய்து விட்டு, தற்போது மறுதேர்வு என்றால், ஏற்கனவே 4 லட்சம் பேர் தேர்வு எழுதியவர்களில் எத்தனையோ பேர் நன்றாக எழுதியிருப்பார்கள். அவர்கள் மறுதேர்வு என்றால் எந்த அளவிற்கு மன உளைச்சல் அடைவார்கள். எந்தத் தவறும் செய்யாத அவர்கள் தேர்வாணையக் கழகத்தின் தவறுக்காக தண்டனை அடைய வேண்டுமா?.

இது போன்றதொரு தவறு திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருந்தால், அதை எவ்வளவு பெரிதாக ஆக்கியிருப்பார்கள்?. தேர்வாணையக் கழகம் வினாத் தாள்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பிலே இருந்தவர்கள் யார்?. அவர்களிடமிருந்து எவ்வாறு வினாத்தாள் வெளியே சென்றது இதற்குப் பதில் காணாமல், சாதாரணமாக யாரையோ பலிகடாவாக்கி பெரிய தவறினை மறைப்பதற்கான முயற்சி தான் தற்போது நடைபெறுகிறது.

கேள்வி: ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் மின் உற்பத்தியைப் பெருக்கி மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று சவால் விட்ட அதிமுக ஆட்சியில் இன்று மின்வெட்டு என்னவாயிற்று?

பதில்: 13,8,2012 மாலை 2,500 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 14,8,2012ல் அதிகாலை 2 மணியளவில் 1,500 மெகாவாட் ஆகவும், நேற்று காலையில் 500 மெகாவாட் ஆகவும் சரிந்துள்ளது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த 2 நாட்களாக தினமும் 5 முதல் 7 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. மொத்தம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் 14,8,2012ல் 2,400 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகியுள்ளது. மொத்தம் 2,080 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்நிலையங்களில் 500 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகிறது. இது தான் அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியை ஆறே மாதங்களில் அதிகரித்து, மின்வெட்டே இல்லாமல் செய்திருக்கின்ற லட்சணம்.

கேள்வி: மின்சாரமும் முறையாக வினியோகிக்காத போது, மின் கட்டண உயர்வு அவசியம் தானா?

பதில்: பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திய அதிமுக அரசு, தற்போது புதிய மின் இணைப்புக்கான கட்டணம், பழுதடைந்த மீட்டர் பெட்டியை மாற்றுவதற்கான கட்டணம், மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் என இவற்றையெல்லாம் மேலும் பல மடங்கு அதாவது சுமார் 3 மடங்கு உயர்த்துவதற்கு மின்வாரியம் முடிவு செய்து, அதற்கான பரிந்துரையை மின் வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்திருக்கிறதாம்.

குடியிருப்புக்கான புதிய மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஒருமுனை இணைப்புக்கு இதுவரை ரூ. 250 என்றிருந்த கட்டணத்தை, ரூ. 900 ஆக உயர்த்துவதற்கு மின்வாரியம் சிபாரிசு செய்திருக்கிறது. மும்முனை இணைப்பு என்றால் இதுவரை ரூ.500 என்றிருந்த கட்டணத்தை, ரூ. 1,600 ஆக உயர்த்த வேண்டுமென்று மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

மீட்டர் பழுதடைந்து, அந்தப் பழுதடைந்த மீட்டர் போர்டு அல்லது பெட்டிகளை மாற்ற வேண்டு மென்றால் தற்போது வீடுகளுக்கான ஒருமுனை இணைப்புக்கு ரூ. 150 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை ரூ. 500 ஆக உயர்த்துவதற்கு மின்வாரியம் பரிந்துரை செய்திருக்கிறது. இதுவே மும்முனை மீட்டர் இணைப்புக்கு தற்போது கட்டணம் ரூ. 150 என்பதை ரூ. 750 ஆக உயர்த்துவதற்கு சிபாரிசு செய்திருக்கிறார்களாம்.

மீட்டரை மாற்ற நுகர்வோர் கோரினால், வீடுகளுக்கான ஒருமுனை இணைப்புக்கு தற்போதைய கட்டணம் ரூ.50 என்பதை 5 மடங்கு உயர்த்தி ரூ. 250 என்று பரிந்துரை செய்திருக்கிறார்களாம். அதுவே மும்முனை இணைப்பு என்றால் ரூ. 50 என்பது 10 மடங்கு உயர்த்தி ரூ.500 என்று சிபாரிசு செய்திருக்கிறார்களாம்.

வீடுகளுக்கான மீட்டருக்கான வைப்புத் தொகையையும் உயர்த்த பரிந்துரை அளித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறு இணைப்பு கோரினால் இணைப்பு தர தற்போது கட்டணம் ரூ. 300. இதை 8 மடங்குக்கு மேல் உயர்த்தி இனி ரூ.2,500 செலுத்த வேண்டுமென்று பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மீட்டர் அட்டை, அதாவது ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் உபயோகித்திருக்கிறார்கள் என்பதைக் குறித்துத் தருகிறார்களே அந்த மீட்டர் அட்டைக்கு தற்போது கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் இனி அந்த மீட்டர் அட்டைக்காக ரூ.10 செலுத்த வேண்டும். அதுவே எச்.டி. மற்றும் எல்.டி.சி.டி. இணைப்புகளுக்கான அட்டை என்றால் ரூ. 100 கட்டணம் கட்ட வேண்டும்.

அதிமுகவிற்கு கடந்த தேர்தலில் விழுந்து விழுந்து ஆதரித்த தமிழ்நாட்டு மக்களே, ஜெயலலிதா அரசின் மின்வாரியம் எப்படியெல்லாம் உங்களுக்கு விலை உயர்ந்த (?) சேவை செய்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi held the Tamil Nadu Public Service Commission (TNPSC) responsible for the question paper leak. Instead of enquiring those responsible for the safe custody of the question papers, the government was trying to cover up the matter by arresting ordinary people. In a statement, Karunanidhi said over four lakh candidates had appeared for the Group-II Services examination. “Many of them would have fared well in the examination. A re-examination would subject the candidates to mental agony. Why should they be punished for the mistake committed by the TNPSC,” he wondered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X