அரசு அமைப்பதில் ஆளுநரின் பங்கு எப்படி.. எஸ்.ஆர்.பொம்மை வழக்கு.. மூத்த பத்திரிக்கையாளர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஆர்.பொம்மை வழக்குத் தீர்ப்பில், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவைதான் ஒரே இடம் என்று கூறப்பட்டிருப்பதால், ஒருவருக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த முடியாது என்ற தவறான புரிதல் ஒன்று உள்ளது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ஆளுநர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களை அணிவகுக்கச் செய்வதற்கு எதிர்மறையானதாகும். ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏக்களை நிறுத்தித் தலையை எண்ணுவதுதான் கண்டிக்கப்பட்டது. பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டுவதற்குப் போதுமான ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் கேட்க முடியாது என்பதல்ல என்று மூத்த பத்திரிக்கையாளர் கே. வேங்கடரமணன் கூறினார்.

அரசு அமைப்பதில் ஆளுநரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் கே. வேங்கடரமணன் வெளியிட்டுள்ள பதிவினை விசிக எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை அப்படியே பார்ப்போம்.

The Governor s Role in Government Formation Senior Journalist Explains Citing the SR Bommai Case

"தமிழ்நாட்டில் தற்போது அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சியின் தலைவராக இருக்கும் விஜய்யை அரசு அமைக்க அழைப்பதில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தாமதம் காட்டுவது விமர்சனத்துக்கு உள்ளாவது வியப்புக்குரியதல்ல. ஆனால், அந்த விமர்சனம் மேலோட்டமானதாக இருக்கக் கூடாது. அவருடைய நிலைப்பாட்டின் பின்னுள்ள தர்க்கத்தை நாம் ஆராயவேண்டும்.

தேவையான பெரும்பான்மையைப் பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாத நிலையில், ஆளுநர் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சியை அழைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவசர அவசரமாக ஒரு அரசை நிறுவுவதற்காக இந்த மரபு பயன்படுத்தப்பட வேண்டியதில்லை.

தொங்கு சட்டப்பேரவை உருவானால், அரசு அமைப்பதில் ஆளுநரின் விருப்பத் தீர்மான அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அரசமைப்பு மௌனமாக உள்ளது. எனினும், மரபுகளுக்கு இங்கு ஒரு பங்கு உண்டு.

அரசு அமைக்க உரிமைகோருவோரை எந்த வரிசையில் ஆளுநர் அழைக்க வேண்டும் என்பதை சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது: தேர்தலுக்கு முன் அமைந்த மிகப்பெரிய கூட்டணி, பிறரின் ஆதரவுடன் உள்ள அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சி, அனைத்து கட்சிகளும் இணைந்த தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, மற்றும் சிலர் வெளியே இருந்து ஆதரிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி.

ஆளுநர், முதல்வராக நியமிக்கும் நபர் பெரும்பான்மை ஆதரவு உள்ளவராக இருக்கிறல் அவர் திருப்தியடைய வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை. இந்தத் திருப்தி தனிப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியை மட்டும் அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்கக் கேட்பது இருப்பதிலேயே மிகக் குறைந்த சர்ச்சைக்குரிய வழியாகும்.

ஆனால் நடைமுறையில், இத்தகைய முடிவுகள் குதிரைப் பேரத்தை ஊக்குவிப்பதாகவும், குறிப்பாக சட்டப்பேரவை எண்ணிக்கையாக மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழலில், தேர்தலுக்குப் பிறகு உருவாகக்கூடிய கூட்டணியைத் தடுக்க முயற்சிப்பதாகவும் பார்க்கப்படலாம்; அப்போது எந்த இரண்டு அணிகளும் சேர்ந்து பெரும்பான்மையைப் பெற முடியும்.

தெளிவாக நிரூபிக்கப்பட்ட பெரும்பான்மை இல்லாமலேயே ஒருவரை பதவியேற்கச் செய்வது, ஒரு கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் வேறு காரணங்களுக்காக அரசில் இணைய வழிவகுப்பதாகவும் கருதப்படலாம். இதனால் ஆளுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என எச்சரித்த சமீபத்திய உதாரணங்கள் உள்ளன.

2019-ல் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரின் நள்ளிரவு பதவியேற்பு அதற்கு ஒரு உதாரணம். அவர்களுக்குப் போதுமான ஆதரவு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக ஆளுநர் விமர்சிக்கப்பட்டார். இறுதியில், அஜித் பவார் தனது சொந்தக் கட்சியிலிருந்து தேவையான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களைக் கொண்டு வர முடியாததால், ஃபட்னவிஸ் ராஜினாமா செய்தார்.

மற்றொரு சம்பவம் - இப்போது ஆளுநர் அர்லேகரை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்திருக்கலாம் - 2018-ல் பி.எஸ். எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்ட அழைப்பு. கூட்டணி அமைப்பதை பரிசீலித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் ஜே.டி.(எஸ்.) நீதிமன்றத்தை நாடி, அந்த அழைப்பையும், பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் வழங்கிய 15 நாள் அவகாசத்தையும் கேள்விக்குட்படுத்தின.

உச்சநீதிமன்றம் அடுத்த நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இவ்வளவு நீண்ட கால அவகாசம் அளித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பதற்கான ஆதாரத்தை ஆளுநர் கோருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இதனால், அரசு அமைக்க உதவ வேண்டிய தங்களது பொறுப்பை ஆளுநர்கள் கைவிட வேண்டும் என்பதல்ல பொருள். ராமேஷ்வர் பிரசாத் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், 2005-ல் ஒரு கூட்டணி உருவாகும் முன்பே பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்தது.

வெளிப்படையான காரணம் என்னவென்றால், எந்தக் கட்சியோ கூட்டணியோ பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத நிலையில், "சட்டவிரோத வழிகளில்" அரசு அமைக்க முயற்சிகள் நடந்தன என்பதாகும். யாராவது அரசு அமைக்க உரிமைகோருவதைத் தடுக்க சட்டப்பேரவையைக் கலைக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் பொருள், வெளிப்படையாக முரண்படுவது போலத் தோன்றும் இரண்டு கருத்துகளும் உண்மையானவை: (i) ஆளுநர் அரசு அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைப்பதன் மூலம் இந்தப் பொறுப்பிலிருந்து விலக முடியாது (பீகார் வழக்கு). (ii) ஆளுநர்கள் அவசரமாக ஒரு ஆட்சியை நிறுவக் கூடாது (கர்நாடக வழக்கு).

எந்த விருப்பம் குதிரைப் பேரத்தை அதிகமாக ஊக்குவிக்கிறது? அரசு அமைப்பதைத் தாமதப்படுத்துவதா, அல்லது தேவையான எண்ணிக்கை இல்லாத ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதா? ஒரு நலமான கொள்கையாக, அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சியை அழைப்பதே விரும்பத்தக்க தேர்வாகும்; அதற்கான முன் நிபந்தனையாக விரைவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மேலும் விளக்கமாகச் சொன்னால், ஒரு பக்கம், குதிரைப் பேரம் நிகழ வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் மட்டுமே ஆளுநர் எந்தவொரு வாய்ப்பையும் முன்கூட்டியே நிராகரிக்க முடியாது. மறுபக்கம், சிறுபான்மை பலத்தோடு உரிமைகோருபவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அதனை ஊக்குவிப்பதாகவும் ஆளுநர் தோன்றக்கூடாது.

ஆகவே, விஜய்யை ஆளுநர் நியமித்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திப் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதே சரியான அரசமைப்புச் சட்ட செயல்வழியாகும். பெரும்பான்மை இருப்பதற்கான ஆரம்பகட்ட திருப்திக்காகக் கூடுதல் ஆதரவுக் கடிதங்களைக் காத்திருப்பதும் அதே அளவுக்குச் செல்லுபடியாகும்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்குத் தீர்ப்பில், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவைதான் ஒரே இடம் என்று கூறப்பட்டிருப்பதால், ஒருவருக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த முடியாது என்ற தவறான புரிதல் ஒன்று உள்ளது.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ஆளுநர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களை அணிவகுக்கச் செய்வதற்கு எதிர்மறையானதாகும். ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏக்களை நிறுத்தித் தலையை எண்ணுவதுதான் கண்டிக்கப்பட்டது. பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டுவதற்குப் போதுமான ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் கேட்க முடியாது என்பதல்ல அதன் பொருள்." இவ்வாறு கே. வேங்கடரமணன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+