For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர் நபிகள் நாயகம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் அரசை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர் நபிகள் நாயகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் வழங்கிய போதனைப்படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம், பகல்பொழுது முழுதும் நீர்கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்த அண்ணல் நபிகள் பெருமான், இனத்திமிரை, ஜாதித் திமிரை, நிறத் திமிரை, குலத் திமிரை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன் என்று அன்றே சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களுக்காக வீரமுழக்கமிட்டவர். அவர், "எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கி விட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்" என்று மொழிந்தவர்.

அதுமட்டுமல்லாமல், "தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் அரசை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு" எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர்.

அவர் போதித்த மணிவாசகங்களை மனதில் பதித்து, எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக என்று கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has greeted Muslims on Ramzan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X