நிலக்கரி சுரங்க ஊழல்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-வது நாளாக முற்றிலும் முடக்கம்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் இன்று 4-வது நாளாக முடங்கின.
பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் கடந்த 4 நாட்களாக பாஜகவின் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் நடவடிக்கைகளையும் முடக்கி வைத்திருக்கின்றனர். இன்று காலையும் அவை கூடிய உடனே பாஜகவின் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும் பிரதமர் பதவி விலகக் கோரி பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் நடைபெற்ற மக்களவையின் நடவடிக்கைகள் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30க்கு கூடிய மாநிலங்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து சுமூகமாக செயல்படுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவை சபநாயகர் மீராகுமார் திங்கள்கிழமையன்று கூட்டியுள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி நேற்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications