For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருளர்களை வைத்து அரசு மருத்துவமனைகளில் எலிகளைப் பிடிக்க முதல்வர் உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அரசு மருத்துவமனைகளில் இயங்கும் நடமாடும் உணவகங்களுக்கு தடைவிதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தை பெருச்சாளி கடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பணிபுரியும் 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டம் நடந்தது.

அதன் பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது தொடர்பாக எனக்கு தகவல் வரப்பெற்றது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தேன்.

இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் மற்றும் துறையின் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுபற்றி மருத்துவ அலுவலர்களைக் கொண்ட விசாரணைக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது. அந்தக் குழு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். அவரது மனைவி மலர். இவருக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்ததால் அந்தக் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. சில நாள்கள் கழித்து குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் கடந்த 26ம் தேதி குழந்தை இறந்துவிட்டது.

இது குறித்து குழந்தையின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவரும் இறந்த குழந்தையைப் பார்த்ததாகவும், அப்போது குழந்தையின் முகத்தில் எந்தவித காயமும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு இருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த குழந்தையின் உடலை நன்கு கட்டி ஓர் அறையில் இருந்த தொட்டிலில் பணியில் இருந்த செவிலியர் வைத்ததாகவும், மறுநாள் காலையில் குழந்தையின் தந்தை அந்தக் குழந்தையின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள வந்தபோது, அவர் குழந்தையின் முகத்தில் இருந்த காயத்தைக் கவனித்து அதை பணியிலிருந்த செவிலியரிடமும், உதவிப் பேராசிரியரிடமும் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் பிரேதப் பரிசோதனை தேவையில்லாத இனங்களில் இறந்தவர் உடல் உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசு விதிமுறை. இந்த விதிமுறை ரஞ்சித் குமார் குழந்தை விஷயத்தில் மீறப்பட்டுள்ளது. சவக்கிடங்குக்குள்ளும் இறந்த குழந்தையின் உடல் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. இந்த நிகழ்வில் கவனக் குறைவாகப் பணியாற்றிய இரண்டு டாக்டர்கள் உள்பட 9 மருத்துவப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை இறந்த பிறகே முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கான காரணம் உடலில் செப்டிசீமியாவால் ஏற்பட்டுள்ள திசுக்களின் மாற்றம் போன்றவற்றின் காரணமாகவே இருக்கக்கூடும். எனினும், எலி கடித்ததால் இந்தக் காயம் ஏற்பட்டதா என்பதை அறியும் பொருட்டு, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் திசு பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை வளாகங்களில் நாய், பூனை, எலி முதலியவை வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்கவும், அதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எலிகளை பிடிப்பதில் பழக்கமுள்ள இருளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், மருத்துவ நிர்வாகத்துடன் இணைந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மருத்துவமனைகளிலேயே உணவு அருந்துவதால், நாய், பூனை, எலி தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்தில் உணவு அருந்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் உடனடியாக மூடப்படும். பொதுமக்கள் உணவகங்களிலேயே உணவு அருந்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். பார்வையாளர் நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa has banned mobile restaurants in government hospitals. She took this decision after a new born baby died of rat bite at a government hospital in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X