For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரஸ்- பாஜக 'கூட்டுக் களவாணிகள்'!

By Chakra
Google Oneindia Tamil News

Coal Mining
டெல்லி: நிலக்கரி ஊழலில் காங்கிரசுடன் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளதாகவும், இதனால் தான் இரு கட்சிகளும் சேர்ந்து கொண்டு நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் முடக்கி வருவதாகவும், நிலக்கரி ஒதுக்கீடு பிரச்சனையில் நீதி விசாரணை நடத்த வற்புறுத்தியும் சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் மற்றும் இடதுசாரிகள் உள்பட 7 கட்சிகள் சார்பில் இன்று நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலமின்றி ஒதுக்கீடு செய்த வகையில், நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, தலைமை கணக்கு தணிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான அவருடைய அறிக்கை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின்போது நிலக்கரி துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று, பாஜக வற்புறுத்தி வருகிறது. இதனால் 9 நாட்களாக நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் பாஜக முடக்கி வருகிறது.

மேலும் பிரச்சனையை தீவிரமாக்கும் வகையில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்களும் நடக்கவுள்ளன.

இந் நிலையில், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதை சமாஜ்வாடி மற்றும் இடதுசாரிகள் போன்ற 8 கட்சிகள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் சகஜ நிலை திரும்புவதற்காக ஒன்றுபட்டு செயல்படுவது என்று அந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதே நேரத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தக் கட்சி தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த இரு கோரிக்கைகளையும் வற்புறுத்தி நாடாளுமன்றத்தின் முன் இன்று அந்தக் கட்சிகளின் எம்பிக்களும் தலைவர்களும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், புரட்சிகர சோசலிஸ்டு, பார்வர்டு பிளாக், சமாஜ்வாடி, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

அதிமுகவும் பங்கேற்கவில்லை:

இந்தப் போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்கும் என இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் அதிமுக இவர்களுடன் இன்றைய தர்ணாவில் பங்கேற்கவில்லை.

முன்னதாக தர்ணா குறித்து மூத்த இடதுசாரித் தலைவர் வாசுதேவ் ஆச்சாரியா கூறுகையில், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்பு உள்ளது. அதனால்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதை விரும்பவில்லை.

கர்நாடக மாநிலம் தவிர, சதீஷ்கார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் பாஜக இதே போன்று நிலக்கரி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், தனது அறிக்கையில் நிறைய விஷயங்களை மறைத்திருக்கிறார். நிலக்கரி துறைக்கு அவர் பொறுப்பு வகித்தபோதுதான் பல ஒதுக்கீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளன. சட்டவிரோதமாக செய்த ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முறைகேடு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை விட பெரிய முறைகேடாகும். இது குறித்து அவையில் விவாதம் நடைபெறக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கு சாதகமாக பாஜகவும் அவையில் அமளி ஏற்படுத்தி துணை போகிறது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா கூறுகையில், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ளது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டியது அவசியம். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டும் விசாரணை நடத்த வேண்டும். இது விஷயத்தில் காங்கிரசும், பாஜகவும் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன என்றார்.

தெலுங்கு தேசம் எம்பி நமோ நாகேஸ்வர ராவ் கூறுகையில், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சுரங்க முறைகேடு குறித்து, எங்கள் கட்சி பிரச்சனை எழுப்பி வருகிறது. நிலக்கரி முறைகேட்டில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சியினரும் மிகப் பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர் என்றார்.

காங்கிரஸ் மறுப்பு:

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த பாஜக அனுமதிக்கவில்லை. மக்களுக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றத்தை பாஜக முடக்கி வருகிறது. நாடாளுமன்ற அலுவல் சுமுகமாக நடைபெறும்போது பாஜகவினர் கேள்விகள் கேட்கட்டும். அதற்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார்.

பாஜக கூட்டணி ஒன்றுபட்டு நிற்கிறது-சரத் யாதவ்:

இந் நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் பாஜக கூட்டணி ஒன்று பட்டு நிற்பதாக ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளருமான சரத்யாதவ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ரயில் டிக்கெட்டுகள்போல நிலக்கரி சுரங்கங்கள் எளிதாகக் கிடைக்கின்றன.

2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறி பிரதமருக்கு மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கடிதம் எழுதிய மறுநாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை-மன்மோகன் சிங் திட்டவட்டம்:

இந் நிலையில் ஈரான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடு திரும்பினார். விமானத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பாக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

அதேசமயம் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு போட்டியாக எதுவும் பேசமாட்டேன். போட்டியாக பேசி எதையும் பெற முடியாது. உள்நாட்டு அரசியலில் ஒருங்கிணைப்பு இல்லாததால், 9 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கிற்கான அடித்தளத்தை நாம் அமைக்க முடியவில்லை.

இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்ய ஈரான் ஆர்வமாக உள்ளது. ஈரான் மீது பொருளாதார தடைகள் இருப்பதால் இது கடினமாகவே இருக்கும். இருப்பினும் ஈரானுடன் உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராயப்படும் என்றார்.

English summary
In a move that could virtually isolate BJP and its allies, eight parties including the Samajwadi Party and the Left, on Thursday joined hands to protest the continued disruption of Parliament, demanding normalcy and a probe by a sitting Supreme Court judge into the coal block allocation issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X