அண்ணாவின் லட்சியங்களை காக்க- தூய மனத்துடன் மக்கள் பணி செய்யுங்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கடிதம்

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளனார். அதில், கட்சி தொண்டர்கள் தூய மனத்துடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நாமெல்லாம் ஒரு குடும்பமாய், ஓரணியில் திரண்டு நிற்க காரணமான பேரறிஞர் அண்ணாவின் 104வது பிறந்தநாளில் இந்த கடிதம் வாயிலாக உங்களோடு என் உள்ளத்தின் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கட்சி உறுப்பினர்களை தன் உடன் பிறந்த சகோதரர்களாக நேசித்து அவர்களை வாஞ்சையுடன் 'தம்பி' என்றழைத்து, தன் உள்ளத்தின் ஆழத்தில் தோன்றிய உணர்வுகளை, கொள்கை கோட்பாடுகளை, கடிதங்கள் வாயிலாக தினமும் பகிர்ந்து கொண்டு அரசியல் இயக்கத்தை அறிவு இயக்கமாக மாற்றிய பெருந்தகை அல்லவா நம் பேரறிஞர் அண்ணா!
கல்லூரி படிப்பே அரிதாக இருந்த காலத்தில் முதுகலை பட்டம் பெற்ற சாதனையாளராக பேரறிஞர் அண்ணா கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது, அவர் கண் முன்னே எத்தனையோ வேலை வாய்ப்புகள் தென்பட்டிருக்கலாம். வசதியான வாழ்க்கைக்கு அவருடைய படிப்பு பேருதவி செய்திருக்கலாம். ஆனால் நம் அண்ணா தன் கண் முன் தெரிந்த சமூக அவலங்களை கண்டு உள்ளம் வெதும்பினார். தான் பார்த்த ஏற்றத்தாழ்வுகளால் மனம் நொந்தார்.
இந்த சமூகத்தின் அவலங்களை மாற்ற என்னையே நான் அர்ப்பணிப்பேன் என்று சூளுரைத்தார். ஒரு சமூக சீர்திருத்த தொண்டனாகவே தனது வாழ்வை தொடங்கினார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும். பிறப்பாலும், வாழும் இடத்தாலும், வழி வழியாக வந்த மூட நம்பிக்கைகளாலும், மனிதனை மனிதன் தாழ்த்தி கீழ்மைப்படுத்தும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற தணியாத தாகம் அண்ணாவின் நெஞ்சில் நிறைந்திருந்தது.
இதற்கான போராட்டம் நீண்டதாக இருக்கும். அதற்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப் பணிக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து, தந்தை பெரியாரிடம் பயிற்சி பெறவும், சமூகப் போராளியாக களத்தில் இறங்கவும் அண்ணா உறுதியான முடிவெடுத்தார்.
தேர்தல் வழியாக வெற்றி, அதன் மூலம் ஆட்சி அதிகாரம் என்ற செயல் திட்டம் சமூக நீதியையும், சமூக சீர்திருத்தத்தையும் நிலை நாட்ட மிகவும் உதவியாக இருக்கும் என்ற நீண்ட சிந்தனைக்கு பிறகு, அண்ணா அரசியல் களத்தில் குதித்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தன் இதயக்கனியாக கொண்டு தேர்தல்களை சந்தித்து குறுகிய காலத்தில் வெற்றி பெற்று ஆட்சியை வென்றார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே அண்ணா ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவரது போராட்ட உள்ளம் எதையெல்லாம் தேடி அரசியல் களத்தில் குதித்ததோ அவற்றில் பலவற்றிற்கும் முகப்புரை கூறும் வகையில் சாதனைகளை செய்து முடித்தார்.
எடுத்துக்காட்டாக, நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார். இரு மொழிக் கொள்கையை நிலை நாட்டினார். ஏழை எளியோருக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை செயல்படுத்தினார். சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தனது ஆட்சியே அவரது தலைவர் தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார். இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்திருந்தால் அண்ணாவின் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அந்த இரண்டாண்டு முகப்புரை அமைந்தது.
அயராது உழைத்த அண்ணா உடல் நலம் குன்றி நம்மை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு, நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை அவரது இரக்க குணத்தின் காரணமாக பெற்று கொண்டு, அவரது தயவால் ஆட்சிக்கு வந்த தீய சக்தியோ சமூக சீர்திருத்தம், சமூக நீதி, சமத்துவம் என்ற எந்த ஓர் அண்ணாவின் சிந்தையில் ஊறிய புரட்சிக் கருத்தையும் தன்னுள்ளே கொண்டிராமல், வெளி வேடம் காட்டி ஆட்சியில் அமர்ந்தது. அந்த தீய சக்தியின் தேவையெல்லாம் தனது குடும்பத்தின் குபேர வாழ்வு.
அதை அடைய இயக்கத்தையும், அண்ணாவின் லட்சியங்களையும் அழிக்கவும் துணிந்தார். இவற்றையெல்லாம் கண்டு மனம் வெதும்பி, இது அண்ணாவுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதற்காகவா அண்ணா இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு இயக்கம் வளர்த்தார்? இன்னுயிரை ஈந்தார்? என்று மக்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பி அதிமுக என்னும் உண்மையான அண்ணாவின் இயக்கத்தை நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கடந்த 1972ம் ஆண்டு தோற்றுவித்தார்.
புரட்சித்தலைவரின் உழைப்பால், அண்ணாவை போன்றே மக்கள் மீது அன்பு கொண்ட அவரது உள்ளத்தால் நமது கழகம் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. அண்ணாவின் கொள்கைகள் காப்பாற்றப்பட்டன. பேரறிஞர் அண்ணா இருந்து எவற்றையெல்லாம் செய்து முடிக்க நினைத்தாரோ அவற்றை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். செய்தார்.
பேரறிஞர் அண்ணாவின் வழியில், புரட்சித் தலைவரின் நல்லாசியோடு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த நானும் அதே பாதையில் பயணம் செய்கிறேன். 'உங்களால் நான்' என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். உங்களுக்காகவே நான் என்பதை மீண்டும் உறுதி கூறுகிறேன்.
அதிமுக அரசின் சாதனைகள் அனைத்தும் அண்ணா காண நினைத்த சமூக சமத்துவத்துக்கான செயல் திட்டங்களே. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை நிலை நாட்டி, சமூக நீதியை உறுதி செய்து, ஆணுக்குப் பெண் இங்கே சமம் என்ற புதிய பாதையை வகுத்து, மகிழ்ச்சிகரமான உயர்ந்த வாழ்க்கை தரத்தை தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறேன்.
அண்ணாவின் லட்சியங்களைக் காக்கவும், அண்ணாவின் கொள்கைகளை உயர்த்தி பிடித்து தனது அரசியல் வாழ்வை நடத்திச் சென்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கவும், அதிமுக எதிர்வரும் அரசியல் களங்களில் எல்லாம் மகத்தான வெற்றி பெறும். அதை உறுதி செய்ய நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு தான் பேரறிஞர் அண்ணாவின் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அண்ணாவின் லட்சியங்களை மனதில் தாங்கி, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் தூய உள்ளத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று இந்த நன்நாளில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications