படம் போடாட்டி எப்பூடி.... சேலம் சிறையில் கலாட்டாவில் குதித்த கைதிகள்!
சேலம்: சிறையில் 2 வாரமாக படம் எதையும் காட்டாததால் கோபமடைந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கலாட்டா செய்தனர்.
தமிழக சிறைச் சாலைகளில் கைதிகளுக்குத் தண்டனை மட்டும் தருவதில்லை. மாறாக, சினிமாப் படமும் போட்டு, கறிச் சோறும் ஆக்கிப் போட்டு கலகலப்பாகவே வைத்துள்ளனர்.
சேலம் சிறையில் வாராவாரம் கைதிகளிடையே ஆரவாரமாக இருக்கும். காரணம், வாரத்திற்கு ஒருமுறை படம் போட்டுக் காட்டுவார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக எந்தப் படமும் போடப்படவில்லையாம். இதனால் கைதிகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது போலாகி விட்டது.
மீண்டும் திரைப்படத்தைப் போட்டுக் காண்பிக்கக் கோரி ஏற்கனவே ஜோதிபாசு என்ற ஒரு கைதி, மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரை நைச்சியமாக பேசி கீழே இறக்கிய அதிகாரிகள், ஜோதிபாசுவைப் பிடித்து தனிமைச் சிறையில் அடைத்து விட்டனர்.
இதைக் கண்டித்து 3 கைதிகள் டவர் பிளாக் மாடியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த டியூப் லைட்டைப் போட்டு உடைத்ததில், காயம் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஒரு சினிமாவால் இந்த அளவுக்குப் பிரச்சினை ஏற்படுவதா என்பதை உணர்ந்த சிறை அதிகாரிகள், இன்னும் 2 நாட்களில் படம் போட்டுக் காண்பிக்க முடிவு செய்துள்ளனராம். இதனால் கைதிகளும் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனராம்.
இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, நல்ல படமா போட்டுக் காட்டுங்க...!












Click it and Unblock the Notifications