தெலுங்கானா பேரணி: உஸ்மானிய பல்கலை. மாணவர்கள் - போலீசார் இடையே மோதல்
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா மாநிலம் கோரி இன்று தெலுங்கானா போராட்டக் குழுவினர் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்க முயன்ற உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது.
ஆந்திராவில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாநிலம் கோரி இன்று பிரம்மாண்ட பேரணிக்கு போராட்டக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தப் பேரணிக்கு முதலில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. எகிப்து நாட்டில் அரசுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பேரணியைப் போல் நடத்த போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் இன்று விநாயகர் சிலை ஊர்வலமும் நடைபெற இருப்பதால் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை இருந்து வருகிறது.
இதனிடையே உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் இன்று காலை பேரணி நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்கள் ஆவேசமடைந்து போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். ஆனாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதே நேரத்தில் மற்றொரு வழியாக மாணவர்கள் வெளியேற முயற்சித்தனர். அங்கும் போலீசார் தடுத்தனர். இதனால் சுவரேறிக் குதிக்கவும் மாணவர்கள் முயற்சித்தனர். போலீசாரின் தடுப்பு வேலிகளை உடைத்துவிட்டு வெளியேற முயன்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரில் உச்சகட்ட பதற்றத்தில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications