தமிழகத்திற்கு தண்ணீர் தந்தால், பெங்களூருக்கு தண்ணீர் தர மாட்டோம்- கன்னட அமைப்பு எச்சரிக்கை!
மைசூர்: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக கர்நாடக அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூருக்குக் காவிரி நீர் தருவதை தடுத்து நிறுத்துவோம் என்று கர்நாடக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
மாண்டியா மாவட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், மலவள்ளி தாலுகாவில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு காவிரி குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள குடிநீர் வினியோக வாரிய அலுவலகத்தை காவிரி போராட்டக் குழுவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
உள்ளே புகுந்த அவர்கள் பெங்களூருக்கான குடிநீர் விநியோகத்தை தடுத்து நிறுத்தும் வகையில், சுவிட்ச் ஆப் செய்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல, பெங்களூர் மைசூர் சாலையில் விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் (கே.ஆர்.பேட்டை), சுரேஷ் கவுடா (நாகமங்களா) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வற்புறுத்தினார்கள். போராட்டம் காரணமாக, பெங்களூர் மைசூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேபோல மாண்டியா ரயில் நிலையத்தில் காவிரி போராட்ட குழுவினர் மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அது முடியாததால் மைசூரில் இருந்து வந்த 4 ரயில்கள் திரும்ப மைசூருக்கே அனுப்பி வைக்கப்பட்டன.
சாமுண்டி எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், சிமோகா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
பெங்களூரில் போராட்டம்
இதற்கிடையே பெங்களூரிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துள்ளன.
கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் பெங்களூர் சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடந்தது. கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏக்கருக்கு கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும், வறட்சி பகுதிகளில் பஞ்சாயத்துக்கு ஒரு கோசாலையை அமைக்க வேண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பது உள்பட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில், விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
வாட்டாள் நாகராஜின் உருள் சேவை
கன்னட சலுவளி கட்சி சார்பில் அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே உருள் சேவை போராட்டம் நடந்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா.கோவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாட்டாள் நாகராஜ் உள்பட போராட்டக்காரர்கள் தரையில் போர்வை விரித்து படுத்து உருண்டபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல் கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பை சேர்ந்த 12 பேர் போராட்டம் நடத்துவதற்காக காந்தி பவனை நோக்கி சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் குடிநீர் பாதிப்பு வரும்
நேற்று மாண்டியா மாவட்டம் தொரகடனஹள்ளி குடிநீர் விநியோக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் பெங்களூருக்கான குடிநீர் விநியோகத்தை நிறுத்தியதால் பெங்களூர் நகரின் பல பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெப்பால், எலஹங்கா, பீன்யா, வித்யராயன்புரா, மல்லேஸ்வரம், குமார பார்க், சிக்க லால்பாக், எம்ஜி சாலை, சிவாஜி நகர், ஆர்ஆர் நகர், பனசங்கரி, கனகபுரா சாலை ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு முறை பம்பிங் ஸ்விட்ச்சை ஆப் செய்து விட்டால், மீண்டும் அதை ஆன் செய்து முழு வீச்சில் செயல்பட 48 மணி நேரமாகும் என்பதால் இந்த குடிநீர் விநியோக பாதிப்பு என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications