'உத்தரவிட்ட' வருண பகவான்... அணையைக் காக்க கூடுதல் நீரை திறந்து விட்டது கர்நாடகா!

இதன் காரணமாக இன்று பிற்பகல்வாக்கில் மேட்டூர் அணைக்கு திடீரென அபரிமிதமான அளவில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 17ம் தேதி மேட்டுர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்டது. பாசன நீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களில் 12.18 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடியை துவங்கினர். அன்றைய தினம் அணை நீர்மட்டம் 84.420 அடியாகவும், நீர் இருப்பு 46.504 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.
ஆனால் காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விடவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியது தமிழகம். உச்சநீதிமன்றமும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள், கன்னட அமைப்புகள், கட்சிகள், திரையுலகினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் குதித்தனர்.
இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற முடியாததால் கர்நாடக அரசு தினசரி 9000 கன அடி நீரைத் திறந்து விட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து நேற்று பெங்களூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பந்த் நடத்தினார்கள். அரசின் மறைமுக மற்றும் நேரடி ஆதரவுடன் இந்த பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பந்த் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அதிக அளவிலான தண்ணீர் வரத் தொடங்கியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் நீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு. அதாவது இன்று விநாடிக்கு 20,000க்கும் மேற்பட்ட கன அடி நீரை அது திறந்துள்ளது.
இதனால் இன்று காலை வரை விநாடிக்கு 11,000 கன அடியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் பிற்பகலுக்கு மேல் விநாடிக்கு 26,313 கன அடியாக உயர்ந்தது.
இன்று பிற்பகலில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 70.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்தாலும் கூட மழை நின்றாலோ அல்லது குறைந்தாலோ இந்த நீர்வரத்தும் குறையும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications