காஷ்மீர்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் சில்மிஷம்.. இந்தியா பதிலடி!
நியூயார்க்: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, எனவே இதனை ஐ.நா சபையில் பிரச்சனையாக எழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்தது.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் பேசினார். அப்போது அவர், காஷ்மீர் என்பது ஐ.நா. அமைப்பின் தோல்வியின் அடையாளம் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவே சர்தாரியின் கருத்தினை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.
இந் நிலையில், நேற்று ஐ.நாவின் சிறப்பு அரசியல் குழுவின் கூட்டத்தில் பாகிஸ்தானின் நிரந்தர துணை பிரதிநிதியான ராஜா பஷீர் தரார் பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல், ஐ.நா. சபையின் காலனிமய எதிர்ப்பு திட்டம் நிறைவடையாது என்றார். இந்தப் பிரச்சனைக்கு காஷ்மீர் மக்கள் உள்பட அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு அமைதியான தீர்வைக் காண பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது என்றார்.
அவரின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய இந்திய தூதர் நாம்கியா காம்பா, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் இங்கு எழுப்பியுள்ளது வருந்தத்தக்கது.
பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்தக் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். காஷ்மீர் குறித்து அவர் கூறியவை இந்தக் குழுவின் பணிக்கு தொடர்பு இல்லாதவை. இந்திய அரசியல் சாசனம், தனது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குகிறது என்றார்.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி:
இவரின் கருத்தை மறுத்த பாகிஸ்தானின் பஷீர் தரார், ஐ.நா. குழுவின் பணிக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பற்றது என்று இந்திய பிரதிநிதி கூறுவது சரியல்ல என்றார். மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த இந்தியத் தூதர் காம்பா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. என்று ஆணித்தரமாக தெரிவித்தார். பாகிஸ்தான் இந்த விவகாரத்தை இங்கு எழுப்புவதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் கூறினார்.
இதையடுத்து அந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பற்றிய விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications