சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தியாக தாமோதரன் தேர்வு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக, வைக்கம் பகுதியை சேர்ந்த என்.தாமோதரன் போட்டி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் அடுத்த ஆண்டிற்கான புதிய மேல்சாந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மலையாள மாதமான துலாம் மாத (ஐப்பசி மாதம்) பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி என்.பாலமுரளி நம்பூதிரி திருநடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அதன்பிறகு அடுத்த ஆண்டிற்கான புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.
மேல்சாந்தி பொறுப்பு வகிக்க விண்ணப்பத்தவர்களுக்கு ஏற்கனவே நேர்காணல் நடத்தப்பட்டு, 9 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட காகித சீட்டுகளை, ஒரு வெள்ளி பாத்திரத்தில் போட்டப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு கோவில் கருவறைக்குள் கொண்டு சென்று, ஐயப்பன் சிலை முன் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
அதன்பிறகு பந்தளம் அரண்மனையை சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா, கீர்த்தனா வர்மா என்ற இரு குழந்தைகள் வந்து, குலுக்கல் முறையில் இரு சீ்ட்களை எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவாங்கூர் தேவஸ்சம் போர்டு தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கேரளா உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனர் கே.பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
குலுக்கலில் வைக்கம் தெற்கே நடை ஆறாட்டுகுளங்கரையை சேர்ந்த என்.தாமோதரன் போட்டி(47), சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது வைக்கம் இளங்காவு தேவி கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல மாளிகைப்புறம் அம்மன் கோவிலுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு, அம்மன் சன்னிதியில் நடைபெற்றது. இந்த கோவிலின் புதிய மேல்சாந்தியாக கூத்தாட்டுகுளம் காரமலா கரிக்கோடு இல்லத்தை சேர்ந்த ஏ.என்.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி(45) தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது கொச்சி கடவந்தரா என்.எஸ்.எஸ்.கரயோகம் தேவி கோவில் மேல்சாந்தியாக உள்ளார்.
இது குறித்து திருவாங்கூர் தேவஸ்சம் போர்டு செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய மேல்சாந்திகள் இருவரும், மண்டல பூஜையின் 41வது நாள், அதாவது நவம்பர் 16ம் தேதி பொறுப்புகளை ஏற்க உள்ளனர். கோவில் வழக்கத்தின்படி, இருவரும் பணிகாலம் முடியும் வரை சபரிமலையிலேயே தங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications