எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு கொலை மிரட்டல்: நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கைது
நெல்லை: ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனின் அலுவலகம் அவரது சொந்த ஊரான நத்தன்தட்டை கிராமத்தில் உள்ளது. இந்த அலுவலகம் மீது சமீபத்தில் தாக்குதல் நடந்தது. அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகே அவரது அலுவலகம் தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் செல்போனுக்கு நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அய்யம்பெருமாள் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார்.
அதில் அவர் ராயப்பனை திட்டியும், கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக ராயப்பன் சார்பில் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் அய்யம் பெருமாளிடம் விசாரணை நடத்த ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கனேரி்க்கு விரைந்தனர். அங்கு அய்யம்பெருமாளை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அவரை சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications