எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலைக்கு என்ன வேலை?... திமுக வழக்கு!

இதுதொடர்பாக திமுக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில்,
அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்தக் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார்.
எனவே அவர் இறந்த பிறகு, மெரினா கடற்கரை ஓரம் அவரது உடல் புதைக்கப்பட்டு, அங்கு தமிழக அரசால் 1988-ம் ஆண்டு நினைவிடம் கட்டப்பட்டது. இதற்கான மொத்த செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது.
அதன் ஆரம்ப கட்டுமானம் குடை வடிவில் இருந்தது. அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 1991-92-ம் ஆண்டில் இருகை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற உருவத்தை வடிவமைத்து, எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.
பின்னர் சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு ரூ.1.33 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ரூ.7.70 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற கொள்கையை 29.1.12 தேதியிட்ட பத்திரிகை செய்தி மூலம் அறிவித்தது.
ஆனால் அதில் அ.தி.மு.க. கட்சியின் சின்னமாக இரட்டை இலை அமைக்கப்படும் என்று குறிப்பிடவில்லை. எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எப்படிப்பட்ட கட்டுமானம் நடத்தப்படுகிறது என்பது தெரியாமல் போய்விட்டது.
தற்போது அரசுச் செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. கட்சிச் சின்னமான இரட்டை இலை சின்னம் மிகப் பெரிய அளவில் எழுப்பப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திட்டமிட்டே அரசு மறைத்துள்ளது.
அரசுச் செலவில் ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை அமைப்பது, அதிகார துஷ்பிரயோகமாகும். மக்களின் வரிப்பணத்தை அரசே கையாடல் செய்வது போன்றதாகும். பொதுப்பணத்தின் மூலம் கட்சி சின்னத்தை பொதுமக்கள் மனதில் பதியச் செய்யும் நடவடிக்கையாக உள்ளது.
சட்டப்படி தவறு ஆயிரக்கணக்கில் மக்கள் நடமாட்டமுள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. சின்னத்தை தமிழக அரசு அமைத்திருப்பதன் மூலம், இது தமிழக அரசின் சின்னமோ என்ற எண்ணத்தை, அப்பாவி மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர் மனதில் இந்த சின்னம் சலனத்தை ஏற்படுத்தும். அரசுப் பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி விளம்பரம் தேடிக்கொள்வது சட்டப்படி தவறு.
எம்.ஜி.ஆர். நினைவிடம், அரசின் சொத்தாகும். அரசின் இடத்தில் கட்சி சின்னத்தை அமைத்து அதை பொதுமக்கள் சொத்தாக்க முடியாது. இதுசம்பந்தமாக 2.12.12 அன்று தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்து, கட்சிச் சின்னத்தை அங்கு அமைக்கக் கூடாது என்று கோரினேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இரட்டை இலை சின்னத்தை உருவாக்கி, அதை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பொருத்துவதாக அறிந்தேன்.
எனது புகார் மனுவுக்குப் பிறகு அரசு அவசர அவசரமாக செயல்பட்டு அதை நடைமுறைப்படுத்துகின்றனர். இதை தடுக்காவிட்டால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுவிடும்.
எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை அமைப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications