விவசாயிகளுக்கு 'டெய்லி' 12 மணிநேரம், மும்முனை மின்சாரம்... நத்தம் விஸ்வநாதன் 'ஷாக்' செய்தி!
சென்னை: தமிழகத்தில் மின் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், இதனால் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நேற்று கர்நாடக அரசைக் கண்டித்தும், மின் பற்றாக்குறையைக் கண்டித்தும் போராட்டம் நடத்திய நிலையில் நத்தம் விஸ்வநாதனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு அதிமுக அரசு என்னென்ன செய்து வருகிறது என்பதையும் விளக்கியுள்ளார். அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள்:

ஜெ. உத்தரவின் பேரில் உயர்நிலைக் குழு
தமிழ் நாட்டில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டை படிப்படியாகக் குறைத்து மின்வெட்டினை முழுவதுமாக நீக்கும் பொருட்டு, தமிழக முதல்வர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்து ஆணையிட்டுள்ளார். இந்தக் குழு கூடி மின் நிலைமையை ஆராய்ந்து தகுந்த அறிவுரைகளை வழங்கி வருகிறது.

மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது
மாநிலத்தில் மின் விநியோகத்தின் அளவு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாளொன்றுக்கு சராசரி 175-180 மில்லியன் யூனிட்டாக இருந்தது. தற்போது 210 மில்லியன் யூனிட் அளவிற்கு உயர்ந்துள்ளது.

12 மணி நேர மின்தடை 10 மணி நேரமாக குறைந்தது
மாநிலத்தில் 12 முதல் 14 மணி நேரம் நிலவி வந்த மின்தடை 7 முதல் 10 மணி நேரமாகக் குறைந்துள்ளது. முக்கியமாக இரவு நேரங்களில் 6 மணி நேரம் இருந்து வந்த மின் தடை 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம்
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

புதிய மின் திட்டங்கள்
புதிய மின் திட்டங்கள் முழுமையாக நிறைவு பெற்று விரைவில் மின் உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வல்லூரில் முதல் அலகும் (500 மெகாவாட்), மேட்டூர் அனல் மின் நிலையமும் (600 மெகாவாட்) மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

மார்ச், ஏப்ரலில் நிறைய கிடைக்கும்
வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அலகுகளில் (2 ஒ 600 மெகாவாட்), ஒரு அலகு (600 மெகாவாட்) பிப்ரவரி மாதத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கி 250-300 மெகாவாட் உற்பத்தி செய்து படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து ஏப்ரல் மாதத்தில் முழு அளவில் (600 மெகாவாட்) உற்பத்தி செய்யும். வல்லூரில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது அலகு (500 மெகாவாட்) மார்ச் மாதம் மின் உற்பத்தியைத் தொடங்கும்.

ஒரிசாவிலிருந்தும் கரண்ட் வருகிறது
வெளி மாநிலங்களிலிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரிசா மாநில மின் தொடர் கழகத்திலிருந்து 150 மெகாவாட் மின்சாரம் இரவு மற்றும் காலை நேரங்களில் வாங்கப்படுகிறது. மாநிலத்தில் நிறுவப்பட்டு வரும் தனியார் மின் நிலையங்களுக்கும் ஊக்கமளிக்கப்பட்டு அவற்றிற்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

சாமிநத்தத்திலிருந்து 150 மெகாவாட்
தூத்துக்குடிக்கு அருகில் சாமிநத்தத்தில் அமைந்துள்ள ‘இந்த் பாரத்' நிறுவனத்தின் 150 மெகாவாட் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அனல் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகின்றது.

தொடர்ந்து முனைப்பாக செயல்படுகிறோம்
முதல்வர் ஆணைப்படி தற்போது இயங்கி வரும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின் உற்பத்தியைத் தொடர்ந்து பெறப்படுகிறது. மேலும் சந்தையில் கிடைக்கும் மின்சாரத்தை கொள்முதல் செய்தும் புதிய மின் திட்டங்களைத் துரிதப்படுத்தி வருகிறோம். மின் உற்பத்தியை விரைவில் தொடங்கியும் படிப்படியாக மின்தட்டுப்பாட்டைக் குறைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தொடர்ந்து முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications