For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக தலைவர் பதவியில் ஸ்டிராங்காக உட்காரப் போகும் மு.க. ஸ்டாலின்- 33 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலினை முன்மொழிவேன் என்று வெளிப்படையாக கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திமுகவினருமே ஸ்டாலின் பக்கமே திரளத் தொடங்கியுள்ளனர்.

திமுக தொடங்கிய போது ஐம்பெரும் தலைவர்களாக அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன், மதியழகன், ஈ.வி.கே. சம்பத் ஆகியோர்தான் இருந்தனர். இந்தப் பட்டியலில் கருணாநிதி இடம்பெறவில்லை. அண்ணா மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் என்ற நிலை இருந்ததை மாற்றி திமுகவின் தலைவர் பதவியைக் கைப்பற்றியவர் கருணாநிதி. அன்று முதல் இன்று வரை தொடர்ந்தும் அப்பதவியில் நீடித்து வருகிறார் அவர். கருணாநிதியைத் தவிர வேறு யாரும் திமுக தலைவராக வந்திருந்தாலும் கட்சியை இவ்வளவு வலுவாக நடத்தியிருக்கவும் முடியாது. அந்த அளவுக்கு கடந்த 50 வருடமாக கட்சியைக் கட்டிக் காத்து வந்துள்ளார் கருணாநிதி.

எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்...

எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்...

திமுகவின் தலைவர் பதவிக்கு போட்டியாளராக இருப்பார் என்று கருதப்பட்டதால் 1972-ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றினார் கருணாநிதி. இதே நிலைமை 1990களில் வைகோ வடிவத்தில் வெடித்தது. தமக்குப் பின்னால் ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி போட்ட திட்டத்துக்கு வைகோ இடையூறாக இருப்பார் என்பதால் 1993-ல் அவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்ற நிலைமை மெல்ல மெல்ல வளர்த்தெடுக்கப்பட்டது. கருணாநிதியின் குடும்பத்தில் வேறு எவரும் இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இல்லை.

கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த முரசொலி மாறன் திமுகவில் முதன்மையான நபராக இருந்தாலும் அவர் கருணாநிதியின் 'மனசாட்சி' என்ற பாத்திரத்தையே வகித்து வந்தார். ஸ்டாலினின் தலைமையை முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் எப்படி ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் முரசொலி மாறன் உடல்நலக் குறைவால் காலமானார். பேராசிரியர் அன்பழகனோ, ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என்றார்.

குடும்பத்தில் பலரும் அரசியல் ஆடுகளத்துக்குள் இறங்கி...

குடும்பத்தில் பலரும் அரசியல் ஆடுகளத்துக்குள் இறங்கி...

இந்த காலகட்டத்தில்தான் மு.க. அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் என கருணாநிதியின் குடும்பத்தில் பலரும் அரசியல் ஆடுகளத்துக்குள் இறங்கத் தொடங்கினர். இது மு.க. ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியைத் தந்தது. இந்த நெருக்கடியில்தான் தயாநிதி மாறன் குடும்ப வசம் இருக்கும் தினகரனில் ஸ்டாலின், அழகிரி, தயாநிதிக்கான செல்வாக்கு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி மூன்று அப்பாவிகளின் உயிர் பறிபோனது. இதையடுத்து ஸ்டாலின்-அழகிரி என்ற இருமுனைப் போட்டி உருவானது.

இதில் தயாநிதி மாறன், ஸ்டாலின் கோஷ்டியில் ஐக்கியமானார். கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு திகார் சிறைக்குப் போய்விட்டுத் திரும்பியது முதல் ஸ்டாலின் கோஷ்டிதான்.

ஸ்டாலின்- அழகிரி ஆதரவு கோஷ்டிகள்

ஸ்டாலின்- அழகிரி ஆதரவு கோஷ்டிகள்

திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் மத்திய அமைச்சர் என்ற பதவியையும் அழகிரி பெற்றுக் கொண்ட அதே நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வாங்கிக் கொண்டார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஸ்டாலின் ஆதரவு அமைச்சர்கள், அழகிரி ஆதரவு அமைச்சர்கள் என்ற பட்டியலே இருந்தது. அழகிரி கோஷ்டியில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி, தமிழரசி, பெரிய கருப்பன், சுரேஷ் ராஜன் என்று நீண்டிருந்தது.

பின்னர் வீரபாண்டி ஆறுமுகமும் இந்தப் பட்டியலில் இணைந்தார். ஆட்சி பறிபோன பின்னர் 10 மாவட்டச் செயலர்கள் அழகிரி பக்கமும் 25 மாவட்ட செயலர்கள் ஸ்டாலின் பக்கமும் நின்றனர்.

ஸ்டாலினை தீவிரமாக முன்னிறுத்திய கருணாநிதி

ஸ்டாலினை தீவிரமாக முன்னிறுத்திய கருணாநிதி

என்னதான் மு.க. அழகிரி முறுக்கிக் கொண்டு நின்றாலும் தமக்குப் பிறகு கட்சியில் மு.க. ஸ்டாலின் என்ற நிலையை வலுவானதாக உருவாக்கிவிட்டார் கருணாநிதி. இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வலம் வந்து தமக்கான ஆதரவை வலுப்படுத்தும் வேலைகளில் மும்முரமும் காட்டினார் ஸ்டாலின். இந்நிலையில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுத்துவிட்டு திரும்பிய ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி பட்டாபிஷேகத்துக்கு ஒத்திகை பார்த்தார் கருணாநிதி. திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டதால் மு.க. அழகிரி ஆதரவு மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது

பகிரங்கமாக அறிவித்த கருணாநிதி

பகிரங்கமாக அறிவித்த கருணாநிதி

இந்தப் பின்னணியில் தமக்குப் பின்னால் 'சமுதாய பணி செய்ய மு.க.ஸ்டாலின்' இருக்கிறார் என்று கருணாநிதி சென்னையில் பேச மதுரையில் 'தீ' பற்றியது. தமக்குப் பின்னால் திமுக தலைவராக ஸ்டாலின்தான் என்பதை கருணாநிதி மறைமுகமாக அறிவித்துவிட்டார் என்றே திமுகவினர் பார்க்கத் தொடங்கினர். இதில் செம கடுப்பாகிப் போன மு.க. அழகிரி. இதன் ஒரு கட்டம்தான் 'திமுக தலைவராக ஸ்டாலினை வழிமொழிவேன்' என்று பகிரங்கமாக கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மு.க. அழகிரியின் ஆதரவு வட்டம் காலியாகிப் போனது.

அழகிரிக்கு 2 மாவட்ட செயலர்களே ஆதரவு

அழகிரிக்கு 2 மாவட்ட செயலர்களே ஆதரவு

திமுகவில் தற்போது மொத்தம் 35 மாவட்ட செயலர்கள் இருக்கின்றனர். இவர்களில் தேனி மூக்கையா, மதுரை புறநகர் மூர்த்தி இருவர்தான் இப்போது அழகிரி ஆதரவு செயலர்கள் என்று கூறப்படுகிறது. திமுகவில் இருந்து வைகோ வெளியேறியபோதுகூட பல மாவட்டச் செயலாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினுக்கு 33 மாவட்ட செயலர்கள்:

ஸ்டாலினுக்கு 33 மாவட்ட செயலர்கள்:

அழகிரி ஆதரவாளர்களாக இருந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், சிவகங்கை பெரிய கருப்பன் எனப் பலரும் ஸ்டாலின் பக்கம் நின்றாக வேண்டிய நிலையில் அணி தாவிவிட்டனர். தற்போதைய நிலையில் தென் சென்னை ஜெ.அன்பழகன், காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், திருச்சி கே.என்.நேரு, கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் பொன்முடி, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நெல்லை கருப்பசாமி பாண்டியன், சிவகங்கை பெரியகருப்பன், நாமக்கல் காந்திச் செல்வன், பெரம்பலூர் துரைசாமி, ஈரோடு என்.கே.கே.பி.ராஜா,

திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், கரூர் நன்னியூர் ராஜேந்திரன், தருமபுரி இன்பசேகரன், திருப்பூர் வெள்ளக்கோவில் சாமிநாதன், கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ராமநாதபுரம் சுப.தங்கவேலன், திருவண்ணாமலை வேலு, திருவாரூர் கலைவாணன், நாகை விஜயன், தஞ்சை பழனிமாணிக்கம், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு என ஒரு ஸ்டிராங் ஆதரவு வட்டம் ஸ்டாலினுக்கு உருவெடுத்திருக்கிறது.

சேலம் மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கத்துக்கோ ஸ்டாலின்தான் அனைத்தும்! சென்னையில் மத்திய சென்னை ஒன்று புதிய மாவட்டம் உருவாக இருக்கிறது. ஜெ. அன்பழகனை அங்கே அனுப்பிவிட்டு தென் சென்னையில் தமது தீவிர ஆதரவாளர் மா. சுப்பிரமணியத்தை செயலராக களமிறக்குகிறாராம் ஸ்டாலின்.

தலைவராவது எப்போது?

தலைவராவது எப்போது?

திமுக தலைவர் பதவியில் ஸ்டாலின் அமரும்போது எந்த ஒரு எதிர்ப்பு இருக்கக் கூடாது என்பதில் கருணாநிதி மிகவும் முனைப்போடு இருக்கிறாராம். கட்சிப் பதவி கேட்டு யார் வந்தாலும் ஸ்டாலினைத்தான் போய் பாருங்கள்.. அவர் சொல்றபடி கேளுங்கள் என்றே சொல்லி வருகிறார். கட்சித் தேர்தலில் கிளைக் கழகம் முதல் தலைமை வரை அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் கருணாநிதி. உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் பொதுக்குழுவில் ஸ்டாலினை தலைவராக்க இருக்கின்றனர்.

English summary
Union Minister MK Azhagiri supporters also turn to his brother MK Stalin Camp after the DMK president Karunanidhi announce of 'Stalin becoming his successor'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X