For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லாமே போலி… போலீஸ் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்த பலே கும்பல்: கோடிக்கணக்கில் மோசடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Job racket busted, fake cops caught!
சென்னை: எத்தனை மோசடிகளில் ஏமாந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வு எதுவும் இன்றி மறுபடியும் ஏமாறுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்கள். எம்எல்எம், ஈமுகோழி, நாட்டுக்கோழி, பைனான்ஸ், காலேஜ் பாட்னர்ஷிப் வரிசையில் போலி போலீஸ் வேலை மோசடியும் இணைந்துள்ளது. ஒரு போலியான விளம்பரத்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்துள்ளனர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள். போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து பல கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்த போலி போலீஸ்கார கும்பலை கைது செய்த போலீசார் அவர்களை காவலில் எடுத்து குமுறுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

விலங்குகளை பாதுகாக்க இந்திய விலங்குகள் பாதுகாப்பு நலவாரியம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இத்துறை சார்பில், தமிழகத்தில் விலங்குகள் பாதுகாப்பு என்ற தனிப்பிரிவு தொடங்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது

லட்சக்கணக்கில் வசூல்

இதற்காக ஏஜென்டுகளையும் நியமித்த ஒரு கும்பல் இன்ஸ்பெக்டர் பணிக்கு பட்டப்படிப்பு, ஜவான் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பணியில் சேர இன்ஸ்பெக்டர்கள் ரூ.6 முதல் 10 லட்சம் வரையும், எஸ்ஐகள் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், முதல் நிலை காவலர்கள் ரூ.3 லட்சம் வரையும் வழங்க வேண்டும் என்று ரகசியமாக தெரிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கில் விண்ணப்பம்

இதை உண்மை என்று நம்பி நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 750 பேரை மட்டும் கும்பல் தேர்வு செய்தது. அவர்கள் தனித்தனியாக சென்னைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர், தேர்வு செய்யப்பட்டதாக கூறி நிர்ணயிக்கப்பட்ட பணம் ரொக்கமாக பெறப்பட்டது. பணத்தை பெற்று கொண்டு போலீஸ் அடையாள அட்டை, சீருடை, தொப்பி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன.

கரண்ட் இல்லை வீட்டுக்கு வரும்

பணம் செலுத்தியவர்கள் பணி நியமன ஆணை கேட்ட போது, மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டுக்கே ஆணை வரும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை வேப்பேரி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் திடலில் நேர்காணல் நடக்கும். அங்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கும்பலை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, பணம் கொடுத்தவர்கள் நேற்று காலை 7 மணிக்கே பெரியார் திடலுக்கு வந்தனர். அங்கு விலங்குகள் பாதுகாப்பு தனிப்பிரிவு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறி போலீஸ் உடையில் சிலர் இருந்தனர்.அதன் ஒருங்கிணைப்பாளர் கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்த பவானி பாபு (78), தலைமை ஆய்வாளர் நாகப்பட்டினம் திருக்குவளை கோவிந்தராஜ் (57), இன்ஸ்பெக்டர் சிவகங்கையில் உள்ள மானாமதுரை செல்வதாஸ் (42), எஸ்ஐ திருக்கோவிலூர் உடன்குடி ஆறுமுகம் (48), இன்ஸ்பெக்டர் கும்பகோணம் குடவாசல் சரவணன் (37), பழனியை சேர்ந்த ஜெயகுமார் (32) ஆகியோர் ஆட்களை தேர்வு செய்தனர்.

மோசடி கும்பல் கைது

இந்நிலையில் மோசடி குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடம் விரைந்து கும்பலை சேர்ந்த 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிதறி ஓடினர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 6 பேரும் போலீஸ் துறையில் இல்லை என்பது தெரிய வந்தது.

காவலில் எடுக்க முடிவு

போலீஸ் துறைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது என்று துணிச்சலாக விளம்பரம் வெளியிட்டு பல லட்சம் ரூபாயை ஒரு கும்பல் சுருட்டியதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணைமுடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இங்கு புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Six persons, including a septuagenarian and three fake police personnel, were arrested on Thursday for running a job racket that offered employment in a fictitious Central government security force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X