ஆபாச இணையதளங்களை முடக்க இங்கிலாந்தில் அதிரடி சட்டம்!
ஆபாச இணையதளங்கள், சிறார்கள் தங்களது தளங்களைப் பார்க்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அவர்களின் கட்டண வழிமுறைகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் அளித்து இங்கிலாந்தில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான ஆபாச இணைய தள நிறுவனங்கள் அடியோடு முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. காரணம், எந்த ஆபாச இணையதளமும், சிறார்களின் பார்வையிலிருந்து தப்பாத வகையில்தான் தற்போது தாராளமாக உள்ளன என்பதுதான்.
இதுகுறித்த சட்ட மசோதா ஒன்றை இங்கிலாந்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறதாம். குழந்தைகள், சிறார்கள், டீன் ஏஜ் வயதினர் ஆபாச தளங்களைப் பார்க்க தடுப்பு நடவடிக்கைளை இணையதளங்கள் மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்யாத இணையதளங்களின் கட்டண வழிமுறைகளை வங்கிகள் தாங்களாகவே முடக்கி விடலாம். அதற்கான அனுமதியை இந்த சட்டம் வழங்கவுள்ளது.
இங்கிலாந்தில் ஆபாச இணையதளங்கள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 180 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனையும் ஆன்லைன் மூலம் வருவதாகும். எனவே இவர்களுக்கு இந்த சட்டம் பெரும் சம்மட்டி அடியாக அமையும்.
புதிய சட்டத்தின்படி ஆபாச இணையதளங்களின் கருப்புப் பட்டியல் ஒன்று வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அந்த இணையதளங்கள், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை ஆபரேட் செய்ய முடியாது. அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கவும் முடியாது.
ஆனால் ஒருவரின் வயதை உறுதி செய்யும் வழிமுறையை செயல்படுத்துவது மிகவும் கடினம் என்று ஆபாச இணையதளங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications