For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“குஷ்பு இன்னொரு மணியம்மை?- கருணாநிதி பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரை- ஆபீஸுக்கு பாதுகாப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Kushboo
சென்னை: "குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மணியம்மையார் யார்?

தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த்தார். அவரே மணியம்மையார் என அழைக்கப்பட்டார். பின்னர் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார்.

பெரியார்- மணியம்மை திருமணத்தை ஆதரிக்காத பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை' 1949-ம் ஆண்டு தொடங்கினர். திமுக தொடங்கும்போது பல மூத்த திமுக தலைவர்களில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையாரே திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் திராவிடர் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அண்மையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் இல்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்து கல்லடி வாங்க நேரிட்டது. திருச்சியில் அப்போதே குஷ்புவிடம் ‘கோபாலபுரம் வீட்டுக்கு வரக் கூடாது என்று உங்களை சொல்லியிருக்கிறார்களாமே?" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார்.

ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார்? அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை?' என்று கேள்விக்குறியோடு வெளியிட்டிருக்கிறது.

பெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.க. கடும் கண்டனம்:

குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த கட்டுரைக்கு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலையில் கடும் கண்டனம் தெரிவித்து பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்கட்டுரையின் சாரம்சம்:

இந்த வார 'குமுதம் ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில், "கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?" என்றும் தலைப்பிட்டுள்ளது. உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க.- அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும். வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர்- அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.

பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார்- நினைவில் இருக்கட்டும்! அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை! அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர்- பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?.

"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார்.

(விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்?- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி, பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்? அவர்களின் உயர் பண்பு- பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம்- கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

பெரியார் தொலை நோக்கோடு செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.

தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை- வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தியோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது. அறிவு நாணயம் இருந்தால், பண்பாடு பற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக! என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.

விடாது கருப்பு போல குஷ்பு விவகாரம்..!

English summary
One of Kumudam group magazines 'Reporter' now faces trouble for its 'Kushboo Another Maniyammai?' article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X