அமெரிக்க புதிய ராணுவ அமைச்சர் சக் ஹேகல்!
வாஷிங்டன்(யு.எஸ்): அதிபர் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மாறுதல் நடந்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி பதவி விலகியதை தொடர்ந்து ஜான் கெர்ரி அந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ராணுவ அமைச்சர் லியான் பனேட்டா பதவி விலகினார். புதிய ராணுவ அமைச்சராக சக் ஹேகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுக்கட்சி செனட்டர்
புதிய ராணுவ அமைச்சர் சக் ஹேகல் குடியரசுக்கட்சி சார்பில் 1996 முதல் 2008 வரை நெப்ராஸ்கா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க செனட்டராக பதவி வகித்துள்ளார். 2008ம் ஆண்டு தேர்தலில் ஒபாமாவுடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன. சொந்த கட்சியை சார்ந்த ஜான் மெக்கெய்னுக்கு நல்ல நண்பராக இருந்த போதும், அவரை அதிபர் பதவிக்கு ஆதரிக்கவில்லை. மாறாக ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஒபாமாவின் முதல் ஆட்சியிலேயே ராணுவ அமைச்சராவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு
நான்கு ஆண்டுகள் முன்பு வரை குடியரசுக் கட்சியின் செனட்டராக இருந்த சக் ஹேகல் ராணுவ அமைச்சராவதற்கு, அவரது கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சராக நியமிக்கப்படுபவர்கள் செனட் சபையில் ஒப்புதல் பெறவேண்டும் என்பது அமெரிக்க நடைமுறை.
செனட் சபை நேர்காணலில் ஹேகலை நோக்கி சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டன. இஸ்ரேலுக்கு எதிரானவர் என்றும், ஈரான் மீது மென்மையான போக்கு கொண்டவர் என்றும் குடியரசுக் கட்சியினர் குற்றம் சுமத்தினர். ஒரு கட்டத்தில் ஹேகல் நியமனத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு பதினைந்து செனட்டர்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதினர்.

செனட் சபை வாக்குப்பதிவில் வெற்றி
இறுதியாக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்த்து அதில் 58 வாக்குகள் அவருக்கு ஆதரவாகவும், 41 வாக்குகள் எதிராகவும் பதிவானது. முன்னாள் குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளாரும் ஹேகலின் நண்பருமான ஜான் மெக்கெய்னும் ஹேகலை ஆதரித்து இருந்தார்.
ஈரான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்த முன்னாள் ராணுவ வீரர் சக் ஹேகல் ராணுவ அமைச்சராக இன்று பதவியேற்கிறார்.












Click it and Unblock the Notifications