டெல்லியில் ப்ளஸ் டூ மாணவியைக் கடத்தி கூட்டாகக் கற்பழித்த கும்பல்! - இருவர் கைது

பாதிக்கப்பட்ட பெண் கிழக்கு டெல்லியில் உள்ள த்ரிலோக்புரியில் வசிப்பவர். இவருக்கு அண்ணனும் ஒரு தங்கையும் உள்ளனர். பெற்றோரை இழந்தவர்.
கடந்த சனிக்கிழமை மாலை தனது தோழியைச் சந்திக்க காஸியாபாத் ஷிர்பா மாலுக்கு சென்றார். பின்னர் இரவு 8.30 மணிக்கு வீடு திரும்ப ஆட்டோவுக்குக் காத்திருந்தார். அப்போது அவருக்கு அருகில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றை வாடகைக்குப் பேசினார். பேரம் பேசுவதுபோல நடித்து நம்ப வைத்து அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டனர்.
முதலில் டெல்லிப் பக்கம் செல்வது போல போக்குக் காட்டிவிட்டு, பின்னர் அப்படியே ஒரு யு டர்ன் எடுத்து சிஆர்பிஎப் சாலைக்குத் திரும்பிவிட்டார்கள். சந்தேகத்தில் அந்தப் பெண் சத்தம் போட, உடனே அவருக்கு இரு புறமும் இருவர் அமர்ந்து வாயை அழுத்திப் பிடித்துக் கொண்டார்களாம்.
அந்தப் பெண்ணை ஆட்டோவுக்குள்ளேயே சில்மிஷம் செய்ய ஆரம்பித்தவர்கள், எதிரில் ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் இருப்பதைக் கண்டதும் மீண்டும் பாதை மாறி, குடியிருப்புகளுக்குள் நுழைந்து, தாஸ்னா அருகே ஆளற்ற இடத்துக்குக் கொண்டுபோய், வயலில் வைத்து கற்பழித்துள்ளனர்.
மூவருமே அந்தப் பெண்ணை கற்பழித்துவிட்டு, அவரது பையிலிருந்து ஏடிஎம் அட்டை, பணம் போன்றவற்றை திருடிக் கொண்டு ஓடியுள்ளனர்.
மிகுந்த உடல்வேதனையுடன் சிரமப்பட்டு சில கிலோமீட்டர்கள் நடந்து சென்ற அந்தப் பெண் ஒரு தாபாவில் தனக்கு நேர்ந்ததைச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்த பொதுமக்கள் இந்தப் பெண்ணை தாஸ்னா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
டிஎஸ்பி ரான் விஜய் அந்தப் பெண்ணை விசாரித்து, அவரைக் கடத்தி கற்பழித்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
"இந்தப் பெண்ணுக்கு இன்னும் மருத்துவ சோதனை நடத்தவில்லை. ஆனால் அவர் இருந்த நிலை, சொன்ன விஷயத்தை வைத்து மூவர் மீதும் கடத்தல், கற்பழிப்பு, திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் இருவரைக் கைது செய்துவிட்டோம். அவர்களை தாஸ்னா சிறையில் அடைத்துள்ளோம். இன்னொரு குற்றவாளி ஆட்டோவுடன் தப்பியுள்ளான். விரைவில் பிடித்துவிடுவோம்," என்றார்.
இந்த மூவருமே மாணவியை சில தினங்களாகப் பின்தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். அவர் தனியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கற்பழித்துள்ளனர். விசாரணையின்போது முதலில் மறுத்தவர்கள், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டனர், என்றார் டிஎஸ்பி.












Click it and Unblock the Notifications