நடிகர் சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது - அன்னா ஹசாரே சொல்கிறார்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தடா கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில் சஞ்சய்தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
ஏற்கனவே, சஞ்சய்தத் 1 1/2 ஆண்டு காலத்தை சிறையில் கழித்து விட்டார். மீதியுள்ள 3 1/2 ஆண்டு ஜெயில் தண்டனையை மட்டுமே அவர் இனி அனுபவிக்க வேண்டும். 4 வார காலத்தில் அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவருக்கு மராட்டிய கவர்னர் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய சட்ட மந்திரி கருத்து தெரிவித்து இருந்தார்.
ரஜினி உட்பட இந்த விஷயத்தில் சினிமா உலகிலும் சஞ்சய்தத்துக்கு ஆதரவு தந்து வருகின்றனர். சட்ட நிபுணர்கள் இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறு இல்லை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சொல்கிறார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புதான் இறுதி முடிவு. இதனால் சஞ்சய்தத் தண்டனையை ஏற்க தயாராக வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சஞ்சய்தத் கட்டுப்பட வேண்டும். தண்டனையை அனுபவிக்க வேண்டும். பொதுமன்னிப்பு வழங்க கூடாது' என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மராட்டிய மாநில பாரதீய ஜனதாவும் பொதுமன்னிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் வினோத் கூறும்போது, 'சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். இதனால் காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அரசு சஞ்சய்தத்துக்கு மன்னிப்பு வழங்க கூடாது' என்றார்.
சஞ்சய்தத்தின் சகோதரி பிரியா காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications