தமிழக மீனவர்களை இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்களாக கருதுகிறது மத்திய அரசு': ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Centre should withdraw Kathchatheevu pact: Jaya
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கச்சத் தீவை இந்தியாவுடன் இணைப்பதே தீர்வாக இருக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனிதா ராதா கிருஷ்ணன் (தி.மு.க), மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.), உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் இந்த தீர்மானத்தின் மீது பேசினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த போது இந்தப் பிரச்சனை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

1974ம் ஆண்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி தான்.

அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக, தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 1991ம் ஆண்டு நான் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து காப்பாற்ற கச்சத்தீவினை மீட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தினேன்.

குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்குச் சென்று மீன் பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை பலமுறை வற்புறுத்தி இருக்கிறேன். இருப்பினும், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

2006 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி தயவில் தான் மத்திய அரசும் இருந்தது. தன் நலத்திற்காக பல மிரட்டல்களை மத்திய அரசுக்கு விடுத்த கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக கச்சத்தீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவு பற்றிய எண்ணமே கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால், 12.8.2012ல் நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட டெசோ மாநாட்டில், கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு; தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால், 1974ம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட போது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதைத் தடுக்க தவறிவிட்டார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்திய அரசு தாரைவார்க்க முயன்றபோது, அதனை எதிர்த்து அப்போதைய மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை 1974ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பின்பற்றி இருப்பாரேயானால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு இருக்காது. ஆனால் அன்றைய தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி அதைச் செய்ய தவறி விட்டார்.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதையும்; அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும்; இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக் குறியாகியுள்ளது.

பரம்பரை பரம்பரையாக, மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசோ தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது.

மத்திய அரசின் கையாலாகாத்தனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது. தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும்.

எனவே தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி; இது குறித்த இந்தியா இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன்வைத்து சட்ட ரீதியாக இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+