For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள மீனவர்கள் விவகாரத்தில் தீவிரம், தமிழக மீனவர்களிடம் பாரபட்சம்.. கருணாநிதி வேதனை

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த 2 இத்தாலி கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கை கடற்படையினரிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகி வருகிறதே?.

பதில்: கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலம் எங்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாலும், தேவையான அளவுக்கு குடிதண்ணீரை வழங்கிட தகுந்த நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளாததாலும், ஆங்காங்கே காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என்று போராட ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னை மாநகரை பொறுத்தவரை, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் குடிதண்ணீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது. பருவமழை வழக்கமான அளவுக்கு இல்லாததாலும், கிருஷ்ணா நீர் வரவு குறைந்து விட்டதாலும், பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துவிட்டது.

பூண்டி ஏரியில் தற்போது 406 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு முக்கிய ஏரியான புழல் ஏரியில் 1796 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது.

சோழவரம் ஏரியில் வெறும் 76 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 1242 கனஅடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 4 ஏரிகளின் தண்ணீர் இருப்பு மொத்தம் 7,039 மில்லியன் கனஅடி என்று இருந்ததற்கு மாறாக, இப்போது 3,520 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

கோடை வெயில் அதிகரித்து வருவதாலும், ஏரிகளில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரும் வற்றிவருவதாலும், சென்னை நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு என்று செய்தித்தாள்கள் தொடர்ந்து எழுதிவருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிதண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை, மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்காது. இதனால் வறட்சி நிலையும், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

பருவமழை பெருமளவுக்கு குறைந்து போய்விட்டதாலும், நீர் ஆதாரங்கள் தேவையான அளவுக்கு தண்ணீரைப் பெற முடியாததாலும், நிலத்தடி நீர் வெகுவாக வற்றிவிட்டதாலும், குடிநீர் பற்றாக்குறையும், பஞ்சமும் ஏற்படும் என்பதை முன்கூட்டியே எண்ணிப்பார்த்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதிமுக அரசு; பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீரை தேவையான அளவுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படை கடமையையும் அலட்சியப்படுத்தி, பொதுமக்களை குறிப்பாக பெண்களை, குடிதண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் அன்றாடம் அலையும் அவலத்தை ஏற்படுத்திவிட்டது.

கேள்வி: தமிழக கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 51 மீனவர்களை சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுவிட்டார்களே?.

பதில்: ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப்படகில் வந்த சிங்கள கடற்படையினர், மீனவர்கள் 25 பேரை சிறைப்பிடித்து படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதைப்போலவே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, சிங்கள கடற்படையினர், மீன்பிடி படகுகள் ஐந்தையும், அவற்றில் இருந்த 26 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர், தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு செல்லும் நிகழ்வுகள் அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இலங்கை கடற்படையின் இத்தகைய கடுமையான அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த 2 இத்தாலி கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கை கடற்படையினரிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது.

கேரள மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கையை போலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதும்; கேரள மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப்பார்க்காமல் நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும்; தவறல்லவே? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi lambasted Centre for its attitude over TN fishermen issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X