நவாஸ் ஷரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராவது இந்தியாவுக்கு நல்லதா, கெட்டதா?

2008ம் ஆண்டு ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் அதிபரானபோது, இந்தியா பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இல்லை என்று தெரிவித்தார். வெளிநாடுகளில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைப் பார்த்து தங்கள் அரசு பயப்படவில்லை என்றும், காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைபவர்கள் தீவிரவாதிகள் என்றும் தெரிவித்தார். இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் சிமெண்ட் வழங்கப்படும் என்றார் சர்தாரி.
அதே காலகட்டத்தில் தான் 26/11 மும்பை தாக்குதலை நடத்த கசாபும், மற்ற 9 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும் தயாராகிக் கொண்டிருந்தனர். தற்போது பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷரீப் பிரதமராக பதவியேற்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ஷரீப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காஷ்மீர் விவகாரம் குறித்து இருநாடுகளும் சுமூகமாகத் தீர்வு காண வலியுறுத்துவேன். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானை யாரும் பயன்படுத்த விட மாட்டேன். 26/11 தாக்குதலில் ஐஎஸ்ஐயின் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் என்ன தான் வாக்குறுதியை அள்ளிவிட்டாலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதற்கு காரணம் உள்ளது. கடந்த முறை நவாஸ் ஷரீப் பிரதமராக இருந்தபோது அனைத்தும் நன்றாகப் போகவில்லை. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நவாஸ் ஷரீபும் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும் லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால் இது நடந்த 3 மாதம் கழித்து கார்கிலில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூட்டில் இறங்கின.
கார்கில் போர் துவங்கிய பிறகே தனக்கு அந்த ஆபரேஷன் பற்றி தெரிய வந்தது என்றார் ஷரீப். ஆனால் லாகூர் ஒப்பந்தம் செய்யும் முன்பே இது குறித்து ஷரீபுக்கு தெரிவித்தாக அப்போதைய ராணுவ தளபதி முஷாரப் தெரிவித்தார்.
சர்தாரி இனிக்க இனிக்க பேசியிருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு தீர்வு காண முன்வரவில்லை. நவாஸ் ஷரீப் பிரதமராவது இந்தியாவுக்கு அவ்வளவு ஒன்றும் நல்ல செய்தி இல்லை. ஏனென்றால் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்களை கொன்று குவித்த, தீவிரவாத தாக்குதல்கள் நடத்திய லஷ்கர் இ ஜாங்வியுடன் கைகோர்த்துள்ளது. அதனால் தற்போது அவர் அந்த கட்சிக்கு நன்றிக் கடன்பட்டவராகிவிட்டார்.
லஷ்கர் இ ஜாங்வியின் தலைவர் மாலிக் இஷாக் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் சிறையில் இருந்து விடுதலையானபோது நவாஸ் ஷரீப் கட்சியினர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இஷாக் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு நீதிபதிகள் டீயும், பிஸ்கட்டும் வழங்கி உபசரித்துள்ளனர். மேலும் ஷரீபுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் நீண்ட காலமாக தொடர்பு உள்ளது.
ஜிஹாதிகள் எனப்படும் போராளிகள் ஷரீபை தங்களில் ஒருவராகவே பார்க்கின்றனர் என்று தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் தெரிவித்துள்ளார். நிலைமை இப்படி இருக்கு நவாஸ் பிரதமராவது இந்தியாவுக்கு நல்ல செய்தியா?












Click it and Unblock the Notifications