டெம்ரவரியா ஒரு கல்யாணம்... குடும்பம்... என்ஜாய்... சீனாவில் பரவும் பகீர் கலாசாரம்
பீஜிங்: வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை சீனாவில் பெருகி வருவதாக கருத்து கணிப்பு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
வேலைக்காக குடும்பங்களை விட்டு பல மைல்களுக்கு அப்பால் செல்லும் ஆண்கள் பலருக்கு குடும்ப தேடல் அதிகமாக இருக்கிறதாம். எனவே, அதனை தணித்துக் கொள்ளும் வகையில் தற்காலிக குழந்தைகள், மனைவி என்று வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்களாம்.
சம்பந்தப்பட்ட கம்பெனிகளே இவர்களை ஆதரித்து இருப்பிடம் மற்றும் பிற அவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருகிறது என்பது தான் உண்மை.

சீனத் தொழிலாளர்கள்...
சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த வாழ்க்கை...
உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

மன அழுத்தம்... தனிமை...
இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குடும்ப வாழ்க்கை வேண்டி...
சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்காக வந்தவர்களும் இதுபோன்ற தற்காலிக திருமணம் செய்து கொள்வது தெரிய வந்துள்ளது.

லியூ லி என்ன சொல்றார்னா...
வேறு இடத்தில் இருந்து வந்து சீனாவில் வேலை செய்யும் தொழிலாளர்களில், லியூ லி என்பவர் சீன நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் லியூ லி தான்.

இதெல்லாம் சகஜம்பா...
இவர் கூறுகையில், தற்காலிக திருமணம், சேர்ந்து வாழ்தல் போன்றவற்றை கேட்டால் ஆச்சரியம் அளிக்கும். ஆனால், வேறு இடங்களில் இருந்து சீனாவில் வேலை செய்யும் சமூகத்திடம் இது சகஜம் என்கிறார்.

கம்பெனியே வசதி தருகிறது...
தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட கம்பெனிகள் வீடு வசதியும் ஏற்படுத்தி தருகின்றன. அப்போதுதான், பொருட்களை தரமாக உற்பத்தி செய்ய முடியும் என்று கம்பெனிகள் நினைக்கின்றன. மேலும், விபசாரத்தில் ஈடுபடுவது, தவறான பாதையில் போவது போன்றவற்றை தற்காலிக திருமணங்கள் தடுத்து விடுகின்றன.

கொஞ்சம் நல்லது தான்...
இந்த கலாசாரம் ஒரு வகையில் நல்லதுதான் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதேசமயம், தற்காலிக திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் பெண்கள் பிற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications
