தாலி கட்டி கல்யாணமா.. காதலியே தேவையில்லை என்று உதறியவன் நான் - கருணாநிதி

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், ராசேந்திரன், மைதிலி ராசேந்திரன் ஆகியோருடைய மகள் தென்றலுக்கும், திருச்சி மாவட்டம் காளிதாஸ், வேணி காளிதாஸ் ஆகியோரின் மகன் கருணாகரனுக்கும் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்தின்போது கருணாநிதி சுயமரியாதைத் திருமணம் குறித்து விரிவாகப் பேசினார்.
கருணாநிதியின் பேச்சு...
கோபாலபுரத்தில் உள்ள இந்த என்னுடைய இல்ல வாசலில் மாத்திரம் என் தலைமையில் சுமார் இரண்டாயிரம் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதைத் தவிர வெளியூர்களுக்கு நான் சென்று நடத்தி வைத்த திருமணங்கள் பத்தாயிரத்தைத் தாண்டும்.
பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும், நான் பயணம் செல்லும் போது சாலை வழிகளிலும் நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் தனியாக பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
அண்ணாவின் ஆட்சிக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தையும் இயற்றி நமக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறார்கள். நான் 44ஆம் ஆண்டு நடைபெற்ற என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், நான் உங்களிடத்திலே உரிமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
நான் காதலித்த பெண்ணை, திருமணம் செய்து கொள்ள முடியாமல், அவர்களுடைய பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக் கொண்டால் தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல், சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட அந்த நிலையை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
அதற்குப் பிறகு நான் பெண் எடுத்த ஊர், திருமாகாளம். அந்த ஊர் பெண் தான் தற்போது என் பக்கத்திலே நின்று கொண்டிருக்கின்ற தயாளு அம்மையார் எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தான் அழகிரி, ஸ்டாலின், தமிழ் மற்றும் செல்வி என்பவர்கள்.
சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் வாழ்வில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்பட்ட சிக்கலே, திருமணத்திற்கு சம்மதிப்பதற்காக வந்த சிக்கலே தவிர வேறு சிக்கல் எதுவும் இல்லை.
அந்த வகையில் இன்றைக்கு நாட்டிலே நடைபெறுகின்ற ஏராளமான தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் இவைகளை நாம் பின்பற்றி தொடர்ந்து நம்முடைய இல்லங்களில் மேளதாள ஒலி கேட்டால் மாத்திரம் போதாது, தமிழ் ஒலியும் கேட்கின்ற அளவிற்கு நம்முடைய வீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டு, மணமக்களை வாழ்த்தி இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்து விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications