வேட்பாளர் பட்டியல் வெளியீட்டால் அலறிய இ.கம்யூ..! டெல்லியில் ஜெ.வுடன் அவசர சந்திப்பு!!
சென்னை/டெல்லி: ராஜ்யசபா தேர்தலுக்கான 5 வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலறிப் போயுள்ளது. அவசர அவசரமாக டெல்லியில் முகாமிட்டிருக்கும் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பரதன், சுதாகரர் ரெட்டி ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில் அதிமுகவுக்கு 151எம்.எல்.ஏக்கள் இருப்பதால் 4 எம்.பிக்களை உறுதியாக அக்கட்சி பெற்றுவிடும். எஞ்சிய எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளைக் கொண்டு தோழமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுக்க அதிமுக முன்வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனோ தமக்குத்தான் அந்த ஒரு இடம் என்று அடம்பிடித்தார். கட்சியின் இதர நிர்வாகிகளோ தேசியச் செயலர் டி.ராஜாவே மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஜெயலலிதாவுடன் சந்தித்துப் பேசுவதற்காக நேரம் கேட்டு பரதன், சுதகார் ரெட்டி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சென்னையில் முகாமிட்டிருந்தனர். ஆனால் பயனில்லாமல் போனது.

இந்நிலையில் டெல்லியில் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது. இதில் 5 வேட்பாளர்கள் பெயரை ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டிருந்த ஒரு இடத்திலும் அதிமுக வேட்பாளரே நிறுத்தப்படுவது உறுதியானது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் அலறிப் போய் உறைந்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் தற்போது முகாமிட்டிருக்கும் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.பி, பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஜெயலலிதாவுடனான இச்சந்திப்பின் போது ராஜ்யசபா தேர்தல் குறித்து இருதரப்பும் பேசியதாகவும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேண்டுமானால் 6வது வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தினால் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பின் பிறகு அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாறுமா? அல்லது 6வது வேட்பாளரை இ.கம்யூனிஸ்ட் நிறுத்துமா என்பதற்கான விடை எதிர்வரும் நாட்களில் தெரியவரும்..












Click it and Unblock the Notifications