For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத் வாழ் இந்தியர்கள் நலனைக் காக்கவேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

To ensure proper protection and safety for Indian Citizens in Kuwait- Vaiko letter to PM
சென்னை: குவைத்தில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகொள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

குவைத் நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 38 லட்சம் ஆகும். இதில், 68 விழுக்காடான 26 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர்.

குவைத் நாட்டு அரசின் அண்மைக் கால நடவடிக்கையால், குறிப்பாக காவல்துறையின் கெடுபிடிக் கைதுகளால், சட்டப்படி அனுமதியோடும், முறையான விசா ஆவணங்களோடும் அங்கே வசித்து வருகின்ற இந்தியர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தபோதிலும், தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கடுமையான உழைப்பைத் தந்து, குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பெரும் பங்கு அளித்து வந்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், குவைத் அரசாங்கம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, ஆண்டுக்கு லட்சம் பேர் என, அடுத்த பத்து ஆண்டுகளில், பத்து லட்சம் பேரை தங்கள் நாட்டை விட்டு வெளியே அனுப்பத் திட்டமிட்டு உள்ளது.

தகுந்த விசா இன்றி, சட்ட அனுமதி தரும் ஆவணங்கள் இன்றி அங்கே இருக்கின்ற வெளிநாட்டினரை, இந்தியர்களை, தங்கள் நாட்டைவிட்டு அனுப்ப குவைத் அரசுக்கு உரிமை உண்டு என்றபோதிலும், முறையான விசா பெற்று, தகுந்த சட்ட ஆவணங்களோடு இருக்கின்ற இந்தியர்களையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவர்கள் விளக்கம் அளிப்பதற்குக்கூட வாய்ப்புத் தராமல், கொட்டடிகளில் அடைத்து வைத்து இந்தியாவுக்குத் திருப்பி வைப்பது மிகவும் அநீதியானது. இவ்வாறு, கடந்த சில நாட்களில் ஏராளமான இந்தியர்களின் வேலை பறிக்கப்பட்டு உள்ளது.

திடீரென்று கைது செய்யப்படுகிறபோது, அது குறித்து எவருக்கும் ஒரு தொலைபேசி தகவல்கூடத் தர இயலாமல், தங்கள் உடமைகளைக்கூட எடுப்பதற்கு அனுமதிக்காமல், சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குக் குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் நிர்வாகத்திடம் இருந்து அவர்கள் சட்டப்படிப் பெறவேண்டிய ஊதியம், அங்கு ஒப்படைத்து இருக்கின்ற ஆவணங்கள் எவற்றையும் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவே இல்லை.

இப்படிக் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றவர்கள், எதிர்காலத்தில் முறையான விசா அனுமதியுடன்கூடக் குவைத்துக்குத் திரும்ப முடியாது என்ற தடையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள குவைத் நாட்டின் தூதர், அப்படி ஒரு அச்சத்திற்கு இடம் இல்லை என்றும், அத்தகைய தடை ஏற்படாது என்றும் விளக்கம் தந்து உள்ள போதிலும், குவைத் அரசு இதுகுறித்து திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து, இந்திய அரசு, குவைத் அரசிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தி, முறையான விசா ஆவணங்களுடன் இந்தியர்கள் குவைத்துக்குச் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

குவைத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, இந்தியாவுக்கு வந்தவர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்ணீரோடு தெரிவித்து உள்ளனர். எனவே, குவைத்தில் வாழும் இந்தியர்களின் நலனை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுடன் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் நலனைப் பாதுகாக்கத் தேவையான, தகுந்த நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko wrote a letter to PM to ensure proper protection and safety for Indian Citizens in Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X