மாப்பிள்ளை இவ்ளோ கருப்பா??... பெண்ணைக் கட்டிக் கொடுக்காமல் கடத்திக் கொண்டு போன பெற்றோர்!
கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் வந்த இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்த அவர்கள், அவர் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணை வந்த காரிலேயே வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடுத்து காதல் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர்.
மனம் பார்த்து காதலித்த காலம் போய் விட்டது. இப்போதெல்லாம் பணம் பார்த்தும் இன்ன பிற தகுதிகளைப் பார்த்தும்தான் பலர் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நிறம் கருப்பாக இருந்தாலும், வெள்ளையான மனசைப் பார்த்துக் காதலித்த பெண் இன்று பெற்றோர் ரூபத்தில் பெரும் சவாலை சமாளித்து மீண்டுள்ளார். தன் காதல் கணவருடன் மீண்டும் சேர்ந்துள்ளார்.
உடுமலையைச் சேர்ந்தவர் இந்துமதி. 24வயதான இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சென்னை கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவருக்கும் 24 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இவர்கள் இருவரும் கோவை அவினாசிசாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐடி படித்தனர்.அப்போது காதல் மலர்ந்தது. பின்னர் சதீஷ் சென்னைக்கு வந்து விட்டார். இந்துமதி தொடர்ந்து எம்.எஸ்.சி படித்தார். காதலையும் தொலைபேசி மூலமாக தொடர்ந்தனர்.
சென்னைக்கு வேலைக்கு வந்த பின்னர் இருவரது நண்பர்களையும் வைத்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். மறுபக்கம் இந்துமதி வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் தட்டிக் கழித்தார் இந்துமதி. மகள் இப்படித் தட்டிக் கழித்து வருகிறாரே என்று சந்தேகமடைந்த இந்துமதியின் பெற்றோர், விசாரித்தனர். அப்போது தான் ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டு சதீஷின் மனைவியாகி விட்டதாக தெரிவித்துள்ளார் இந்துமதி.
இதனால் இந்துமதியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மகளின் முடிவை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. சரி நடந்தது நடந்து விட்டது. மருதமலையில் வைத்து முறைப்படி திருமணம் செய்துவைக்கிறோம் என்று அழைத்தனர்.
இதைக் கேட்டு இந்துமதி சந்தோஷ பூரிப்படைந்தார். சதீஷின் குடும்பத்தாருக்குத் தகவல் போனது. அவர்களும் ச்ம்மதித்தனர். திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலையில் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது.
காலையிலேயே சதீஷ் குமார் பட்டு வேட்டி சட்டையில் ஜம்மென்று வந்து விட்டார். மாப்பிள்ளை வீட்டாரும் வந்திருந்தனர். மணமகளை அவரது பெற்றோர், உறவினர்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் இந்துமதியின் பெற்றோர், மாப்பிள்ளையை அப்போதுதான் முதல் முறையாக பார்த்துள்ளனர். சதீஷ் குமார் கருப்பாக இருந்ததால், இவரா எங்களது மகளுக்கு மாப்பிள்ளை என்று வெறுப்புடன் கூறியுள்ளனர்.
அதையடுத்து பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் வலுக்கட்டாயமாக இந்துமதியை காரில் மறுபடியும் ஏற்றி திரும்பிச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்சத்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் இந்துமதி இருந்த காரைத் துரத்தி தடுத்து நிறுத்தினர். போலீஸார் வந்தனர், காவல் நிலையத்தி்ல விசாரணை நடந்தது. இறுதியில் இந்துமதி, சதீஷ் குமார் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துள்ளனர். எனவே யாரும் அவர்களைத் தடுக்கவோ, பிரிக்கவோ முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.
மேலும் இனிமேல் எங்களால் எந்தத் தொந்தரவும் வராது என்று இந்துமதியின் பெற்றோரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு இந்துமதி தனது கணவருடன் செல்ல அனுமதித்தனர்.
வெளியில் வந்த இந்துமதி ஆனந்தக் கண்ணீருடன் தனது கணவரை அணைத்தபடி சந்தோஷமாக சென்றார்.
நிறம் மாறாத காதல்...!












Click it and Unblock the Notifications