கம்ப்யூட்டர் தெரியலை…. தப்பு தப்பான இங்கிலீஷ், வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகள்
டெல்லி: கம்ப்யூட்டர் அறிவு இல்லாதது, சரியான ஆங்கிலப் புலமையின்மை போன்ற காரணங்களால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்களாம்.
படித்துப் பட்டம் பெற்று வெளியில் வந்தும் கூட புறச்சூழலுக்கு ஒவ்வாதவர்களாக வெறும் ஏட்டுச் சுரக்காய்களாக இவர்கள் இருப்பதால்தான் இந்த அவல நிலையாம்.
இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட காரணங்களால் வேலை கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு 50 லட்சம் பட்டதாரிகள்
ஆண்டுதோறும் இந்தியாவில்50 லட்சம் பேர் பட்டம் பெற்று கல்லூரிகளை விட்டு வெளியேறுகின்றனர் என்று கூறுகிறது புள்ளிவிபரம் ஒன்று.

25 லட்சம் பேருக்குத்தான் வேலை
ஆனால் இதில் பாதிப் பேருக்குத்தான் உடனே வேலை கிடைக்கிறதாம். மற்றவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

அவர்களே காரணம்
இந்த பரிதாப நிலைக்குக் காரணம் இந்த பட்டதாரிகள்தான். அதாவது போதிய ஆங்கில அறிவு இல்லாதது இவர்களுக்கு வேலை கிடைப்பதற்குப் பெரும் தடையாக இருக்கிறதாம். அதேபோல கம்ப்யூட்டர் பற்றி அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இன்னொரு முக்கியக் காரணமாகும்.

சிறிய நகரங்களில்தான் அதிக பாதிப்பு
பெருநகரங்களைச் சேர்ந்தவர்களை விட சிறிய நகரங்களிலிருந்து பட்டதாரிகளாக உருவாவோர்தான் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

ஆணும், பெண்ணும் இதில் சமம்
ஆண்களைப் போலவே பெண் பட்டதாரிகளும் இந்தப் பிரச்சினையை சம அளவில் சந்திக்கின்றனராம்.

ஆண்களை விட கொஞ்சம் பெட்டர்தான்
இருப்பினும் ஆங்கில அறிவு, கம்ப்யூட்டர் பயன்பாடு உள்ளிட்ட சிலவற்றைத் தவிர மற்ற விஷயங்களில் பெண்கள், ஆண்களை விட சற்று மேம்பட்டவர்களாக உள்ளனராம்.

கலைத்துறையில் பெண்கள் அதிகம்
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பது கலைத்துறைதான். அடுத்து காமர்ஸ், அறிவியல், கணக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

கம்ப்யூட்டர் புரோகிராமிங்
அதேசமயம் கம்ப்யூட்டர் புரோகிராமிங் துறையில் ஆண்களின் கையே ஓங்கியுள்ளதாம்.

கிளர்க் வேலைக்குத்தான்
பெரும்பாலான பட்டதாரிகள் கிளர்க் வேலையில்தான் அதிகம் சேருகின்றனராம். அதாவது 36 சதவீதம் பேர் இப்படிச் சேருகின்றனர்.

ஐடி -பிபிஓ
அடுத்த இடத்தில் ஐடி தொடர்புடைய வேலைகள் மற்றும் பிபிஓ துறை வருகிறது. இதில் 21.4 சதவீதம் பேர் சேருகின்றனர்.

சேல்ஸ் - கஸ்டர் சர்வீஸ்
அடுத்து சேல்ஸ் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் வேலைகளில் சேருகின்றனர். அதாவது சேல்ஸ் துறையில் 16 சதவீதம் பேரும், கஸ்டமர் சர்வீஸ் துறையில் 14 சதவீதம் பேரும் சேருகின்றனர்.

ஆசிரியர் வேலையில் 15 சதவீதம் பேர்
ஆசிரியர் வேலையில் சேருவோரின் எண்ணிக்கை 15 சதவீதமாக உள்ளது.

நகரங்களைப் பொருத்து
மாணவர்கள் எந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களின் வேலைவாய்ப்பை நிர்ணயிக்கிறதாம். பெருநகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிக்கல் பெரும்பாலும் இருப்பதில்லை என்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் சிக்கல் ஏற்படுவதில்லையாம்.

2ம் நிலை நகரங்கள்
2ம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கில அறிவிலும் பிற விஷயங்களிலும் இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

3ம் நிலை நகரங்கள் மோசம்
3ம் நிலை நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு மிகவும் மோசமாக இருக்கிறதாம். அதேசமயம், ஆங்கிலம் பேசுவதிலும் அவர்கள் பெரும் தடுமாற்றத்தை சந்திக்கின்றனராம்.
படிக்கும்போதே ஆங்கிலத்தை முறையாக கற்றுக் கொள்ளாததும், அதில் ஆர்வம் காட்டாததுமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வை நடத்தியவர்கள்.












Click it and Unblock the Notifications