''நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ராயலசீமா தனி மாநிலம் கோருவோம்''

60 ஆண்டுகால தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் இன்று ஹைதராபாத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சிறுபாசனத் துறை அமைச்சர் டி.ஜி. வெங்கடேஷ், தெலுங்கானா தனி மாநில மசோதாவை பார்லிமென்ட்டில் தோற்கடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எப்படியும் அந்த மசோதாவை தோற்கடிப்போம். அப்படியும் முடியாது போனால் எஞ்சிய ஆந்திராவில் நாங்கள் இணைந்திருக்க சில நிபந்தனைகளை விதிக்கிறோம்.
தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர பிரதேசத்துக்கு 'ராயல ஆந்திரா' என்று பெயர் வைக்க வேண்டும். அதேபோல் ராயல் ஆந்திராவின் தலைநகரம் ராயலசீமாவில் அமைய வேண்டும்.
ஏற்கெனவே 1953ஆம் ஆண்டு ஆந்திரபிரதேசம் உருவாக்கப்பட்ட போது ராயலசீமாவின் கர்நூலில்தான் முதலில் தலைநகரம் அமைக்கப்பட்டது. பின்னர்தான் ஹைதராபாத் இணைந்த நிலையில் தலைநகரம் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. ராயலசீமா பகுதி தொடர்ந்தும் வறட்சியால் வாடும் பிரதேசம். அதனால் கிருஷ்ணா நதிநீர் பகிர்வு பற்றி விளக்கப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான் நாங்கள் எஞ்சிய ஆந்திராவில் இணைவோம். இல்லையெனில் கடலோர ஆந்திராவின் சில மாவட்டங்களையும் உள்ளடக்கி 'அகன்ற ராயலசீமா' தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications