சென்னை பாதிரியார் மீது பாலியல் தொல்லை புகார்
சென்னை: செனனை அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சேலையூர் அருகே உள்ளது சந்தோஷபுரம். இங்கு அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விக்னராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மனைவி ரீட்டாமேரி (39) என்பவர் விஷேச நாட்களில் உணவு தயார் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி அன்று தேதி ஆலயத்தில் சாம்பல் புதன் கொண்டாடப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ரீட்டாமேரி ஈடுபட்டார். இரவு வெகு நேரமாகி விட்டதால் சர்ச் பாதிரியார் அவரை மறுநாள் வரச் சொன்னதாக கூறப்படுகிறது.
மறுநாள் பக்தர்களுக்கு உணவு கொடுத்த காலி பாத்திரங்களை ரீட்டா மேரி கழுவச் சென்ற போது, பாதிரியார் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து ரீட்டா மேரி தனது கணவர் ஜான்சன் மற்றும் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பாதிரியாரிடம் போய் நியாயம் கேட்டுள்ளனர். இதனால், கோபமடைந்த பாதிரியார், ரீட்டாமேரி குடும்பத்தினரை சர்ச்சில் இருந்து ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிரியார் இல்லாத நேரங்களில் ரீட்டா மேரி, சர்ச்சிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாதிரியார், ரீட்டாமேரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாதிரியார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரீட்டாமேரி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, பாதிரியார் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications