For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிப்பதா? கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. ஆதரித்துள்ளதன் மூலம் கருணாநிதி இரட்டை வேடம் போட்டது வெட்டவெளிச்சமாகிவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது;

தன்னலத்திற்காக, "காவிரி நதிநீர்ப் பங்கீடு", "கச்சத்தீவு தாரைவார்ப்பு", "இலங்கைத் தமிழர் பிரச்சனை", "சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு" என பல்வேறு பிரச்சனைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த தி.மு.க. தலைவர். கருணாநிதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து துரோகம் இழைத்துவிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை அறிமுகப்படுத்தி, மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இதனால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, இந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தேன்.

அதற்கு "தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை தி.மு.க. ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும்" என்று பதில் அளித்து இருந்தார் கருணாநிதி.

தமிழகத்திற்கு துரோகம்

தமிழகத்திற்கு துரோகம்

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் 26.8.2013 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட திருத்தம் மசோதா நிறைவேறும் தருணத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அறிவித்தும், கடைசி வரை இதற்கான திருத்தம் கொண்டு வரப்படவில்லை. மேலும், மற்ற திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த மசோதாவினை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. ஆனால், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்திருக்கிறார்.

மாநில அரசுகளின் ஒப்புதல்

மாநில அரசுகளின் ஒப்புதல்

நான் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளபடி, மாநிலங்களுக்குச் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கவில்லையெனில் அதற்குரிய ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும், ஆனால் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசைச் சாரும் எனவும் சட்டப் பிரிவு 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்த மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-1 இல் அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் அரிசியின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், "உணவுக் கூப்பன்கள்" வழங்குவது, "பண மாற்றம் செய்வது" ஆகியவற்றை மத்திய அரசு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமலேயே நடைமுறைப்படுத்தவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எதிரானது

தமிழகத்திற்கு எதிரானது

இது மட்டுமல்லாமல், இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவின் 37-வது பிரிவில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவையும், விலையையும் மாற்றுவதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்க இந்தச் சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழகத்திற்கு எதிரான மசோதாவை ஆதரித்துவிட்டு, "ஏழைகளுக்கான உணவு மசோதா தி.மு.க. ஆதரவுடன் நிறைவேறியது!" என்று தன் முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

மணிமேகலை என்பதா?

மணிமேகலை என்பதா?

இந்த மசோதாவை ஆதரித்ததோடு நின்று விடாமல், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவை ஆதரித்ததை மறைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை ‘மணிமேகலை' என்று வருணித்து இருக்கிறார் கருணாநிதி. இதன் மூலம், இந்த மசோதா உணவுப் பாதுகாப்பை அளிக்கும் என்ற பொய்மை தோற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் கருணாநிதி.

வெண்சாமரம் வீசுவதா?

வெண்சாமரம் வீசுவதா?

இலங்கைத் தமிழர் பிரச்சனை, பொருளாதாரக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, முல்லைப்பெரியாறு பிரச்சனை என அனைத்திலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. ஆதரித்துள்ளதன் மூலம் இரட்டை வேடம் போடுவதில் கருணாநிதி தெளிவாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Chief minister jayalalitha has said that DMK chief karunanithi has done many wrong doing while he was in power and has risen the financial burden to the Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X