ரூபாயின் வீழ்ச்சியை காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதா?: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை பல முறை உயர்த்தி, அதன் மூலம் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, மக்களை வாட்டி வதைக்கும் சாதனை புரிந்துள்ள ஒரே அரசு காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.
மக்களின் வேதனையை, சோதனையை தனது சாதனையாக கருதிச் செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது சாதனையை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 70 காசாகவும், டீசலின் விலையை லிட்டருக்கு 50 காசாகவும் உயர்த்தி, அந்தச் சுமை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.
இந்தச் சூழ்நிலையில், மீண்டும் பெட்ரோலின் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசு என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்றும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை எளிய மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நடுத்தர வகுப்பு மக்களையும், சாமானிய மக்களையும் கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வின் காரணமாக, வாகனங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரித்து, அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயரக்கூடும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையும், மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நிலைமை காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை உயர்த்தி உள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதைச் சுட்டிக் காட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது நியாயமற்றதாகும். ஏனெனில், இந்த விலை உயர்வு பண வீக்கத்தை மேலும் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையவே வழிவகுக்கும்.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதற்கு மூல காரணமாக விளங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், நுனிப்புல் மேயும் பணியை மேற்கொள்வது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும்.
இதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் வரை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க இயலாது. இதன் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிக்கடி ஏற்றுவதும் தவிர்க்க இயலாது. எனவே, மத்திய அரசு இதனை சரி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications