65 வயதில் 45 வயது ஆசிரியை மீது மோகம்... திருமணத்திற்கு மறுத்ததால் சுட்டுக்கொன்ற கொடூரம்
65 வயது முதியவர் ஒருவர் 45 வயது ஆசிரியை மீது மோகம் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள தொந்தரவு செய்த அவர், ஆசிரியை மறுக்கவே சுட்டுக்கொலை செய்துள்ளார்.
குடகு: எந்த வயதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாகவே இந்தியா மாறி வருகிறது. ஆறு வயது முதல் 60 வயது வரை பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டு பத்திரமாக திரும்பி செல்ல முடியவில்லை. கேரளாவில் திருமணமான பெண் காவல்துறை அதிகாரியை தொந்தரவு செய்து எரித்துக்கொன்றான் ஒரு கொடூரன். அந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் 45 வயது ஆசிரியை 65வயது நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பலியான ஆசிரியை பெயர் ஆஷா காவேரம்மா என்பதாகும். 45 வயதாகும் இவருக்கு கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள் பெங்களூருவில் படிப்பிற்காக செட்டிலாகி விட இவர் மட்டும் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டை தாலுகா பொன்னம்பேட்டையில் தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
இளம் வயது பெண்களுக்குத்தான் பாலியல் தொந்தரவு வரும் என்பதில்லை. கணவனை இழந்த அழகான பெண்களுக்கும் காமுகர்களால் பாலியல் தொந்தரவு வரும். அப்படித்தான் 60 வயதான ஜெகதீசன் மூலம் தொந்தவு வந்தது. ஜெகதீசன் மனைவியை இழந்தவர். அழகான ஆஷாவைப் பார்க்க பார்க்க திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த ஆசை காம வெறியாக மாறி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ஜெகதீசும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆஷாவை கொன்ற ஜெகதீஷ்
கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல பொன்னம்பேட்டை காவல்நிலையம் முன்பு பஸ் ஏறுவதற்காக வந்திருந்தார் ஆஷா. காலை 8 மணிக்கு வேலைக்கு செல்பவர்களும் பள்ளி செல்லும் மாணவர்களும் அந்த பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜெகதீஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆஷாவை சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஆஷா. இதை தடுக்கப் போன ஒரு இளைஞருக்கும், மாணவருக்கும் கைகளில் குண்டு பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஜெகதீஷ் தற்கொலை
துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடி காபி எஸ்டேட்டிற்குள் புகுந்த ஜெகதீஷை போலீசார் தேடிய நிலையில், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த கொலை, எதற்காக கொலையாளி தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணையில் இறங்கியது போலீஸ். அப்போது பல உண்மைகள் வெளிவந்தன.

ஆஷாவின் மேல் ஆசை
ஜெகதீஷ் பொன்னம்பேட்டையைச் சேர்ந்தவர். காபி தோட்டத்தில் வேலை செய்வதோடு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இவரிடம் ஆஷா வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். கணவனை இழந்த ஆஷா மீது ஜெகதீஷ்க்கு ஒரு கண். ஆஷாவின் அப்பா வயதில் இருந்தாலும் ஆசை யாரை விட்டது. காம வார்த்தைகளைப் பேசி தூண்டில் போட்டான் ஆனால் அதற்கெல்லாம் ஆஷா மசியவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்தான்.

புகார் கொடுத்த ஆசிரியை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஷ் கொடுத்த தொந்தரவு அதிகரிக்கவே வேறு வழியின்றி போலீசில் புகார் கொடுத்தார். பாலியல் தொந்தரவு செய்வதாக கொடுத்த புகாரை விசாரித்த போலீஸ் ஜெகதீஷை எச்சரித்து அனுப்பியது. ஆஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தள பங்கங்களில் பரப்பினான் மனம் நொந்த ஆஷா, வேலையை ரிசைன் செய்து விட்டு பெங்களூரு சென்று விட திட்டமிட்டிருந்தார். பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் வேலை தொடர்ந்தார். அதுதான் வினையாகிவிட்டது.

தொடர் தொந்தரவு
ஜெகதீஷ் கொடுத்த தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்தது. மனம் வெறுத்துப்போன அவர் ஜெகதீஷ் மீது பலாத்கார புகார் கொடுத்தார்.இதனால் ஜெகதீஷை கைது செய்து சிறையில் தள்ளினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர் மனதில் வன்மம் குடியேறியது. தன்னை சிறையில் தள்ளிய ஆஷாவை பழிக்குப் பழி வாங்கும் விதமாக சுட்டுக்கொன்றார். வயதான காலத்தில் சிவா, ராமா என்று ஓய்வெடுக்காமல் பெண்ணாசையில் சிக்கி அவமானப்பட்டு கொலையும் செய்து கடைசியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஷ். இந்த சம்பவம் குடகு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications