பெங்களூர் ரிசார்ட்டில் விடிய விடிய போதை விருந்து.. இளம்பெண்கள், சிறுவர்கள் என 115 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் விடிய விடிய நடந்த போதை விருந்தில் பங்கேற்ற சிறுவர்கள், இளம்பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ரிசார்ட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், போதை மருந்து செலுத்த பயன்படும் ஊசிகளும் சிக்கியுள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் பார்ட்டி என்ற பெயரில் போதைப் பொருள் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பெங்களூர் தெற்கு கக்கலிபுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சுகாஷ் கவுடா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.
அதிகாலையில் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு போதை விருந்து நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த போதை விருந்தில் இளம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தெரியவந்தது. மது அருந்திவிட்டு போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதில் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
ரிசார்ட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, போதைப் பொருள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரிசார்ட்டில் இருந்த இளம்பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்தார்கள். இதில் இளம்பெண்கள் மட்டும் 35 பேர், 3 சிறுவர்கள் ஆவர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது: "கைதான 115 பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள்தான். பெங்களூரில் இருந்து கக்கலிபுராவில் உள்ள ரெசார்ட்டுக்கு வந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை போதை விருந்து நடத்தியிருக்கிறார்கள். அனைவரும் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 115 பேருக்கும் ராமநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்களா என்பது மருத்துவ பரிசோதனையின்போது தான் தெரியவரும். ரெசார்ட் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின்போது கஞ்சா, சில ஊசிகள் சிக்கியுள்ளன. மது விருந்தில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications