செல்பி மோகம்: 140 அடி ஆழத்தில் விழுந்த இளைஞர்.. திக் திக் சம்பவம்.. லைவ் லொகேஷன் மூலம் மீட்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கோகக் நீர் வீழ்ச்சியில் நின்று கொண்டு செல்பி எடுத்த இளைஞர் 140 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படங்கள் எடுப்பது என்பது திருவிழா, பண்டிகை, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், போட்டிகளில் வெற்றி உள்ளிட்டவைகளில் எடுக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாக மாறுகிறது.
ஆனால் அண்மைக்காலமாக செல்பி மோகத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல் துலக்கினால் செல்பி, பானி பூரி சாப்பிட்டால் செல்பி, கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் என பாரபட்சம் இல்லாமல் இந்த செல்பி மோகத்தால் இளைஞர்கள் ஆபத்துகளை உணருவதில்லை.

ரயில் மோதி இளைஞர் பலி
ரயில் வரும் போது செல்பி எடுக்கும் போது ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு, ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது செல்பி எடுத்தவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயம், காட்டு விலங்குகளை சீண்டிவிட்டு அதனுடன் செல்பி எடுக்கும் போது விலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது என ஆபத்துகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமூகவலைதளங்கள்
துக்கமான, இறுக்கமான மனநிலையில் இருக்க வேண்டிய நிலையிலும் செத்து போன தாத்தா , பாட்டியுடன் எல்லாம் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சமூக ஆர்வலர்கள், காவல் துறையினர் செல்பி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த செல்பியால் காயங்கள், உயிரிழப்புகள், உடலுறுப்பு இழப்பு உள்ளிட்டவை தொடர்கதையாகி வரும் நிலையில் கர்நாடகாவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.

கோகக் நீர் வீழ்ச்சி
கர்நாடகா மாநிலம், பெலகாவியில் உள்ளது கோகக் நீர் வீழ்ச்சி. இது கர்நாடகாவின் நயாகரா நீர் வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. கல்புருகி மாவட்டம் ஜீவார்கி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் சாகர் (30). கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் பிரதீப் தனது 5 நண்பர்களுடன் கோகக் நீர் வீழ்ச்சிக்கு சென்றார்.

செல்பி எடுக்க முயற்சி
அப்போது அருவியின் மேல் பகுதியிலிருந்து பிரதீப் செல்பி எடுக்க முயன்றார். அப்போது நிலைத்தடுமாறி 140 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த நண்பர்கள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் வந்தனர்.

சிக்கல்
இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது. அது போல் பிரதீப்புக்கு போன் செய்தும் எந்த பதிலும் கிடைக்காததால் அவர் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது செல்போன் மூலம் நண்பர்களுக்கு பிரதீப் போன் செய்துள்ளார். இதையடுத்து நண்பர்களின் தகவலின்படி பிரதீப்பை தொடர்பு கொண்ட தீயணைப்புத் துறையினர் லைவ் லொகேஷனை ஷேர் செய்ய கூறினர்.

தீயணைப்பு துறையினர்
அது போல் பிரதீப்பும் செய்தார். இதையடுத்து அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறு காயங்களுடன் பிரதீப் உயிர் பிழைத்திருந்தாலும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் உள்ளதாகவும் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications