குலையே நடுங்குதே.. ரேட் விஷயத்தில் தகராறு.. பயணியை அடித்தே கொன்ற ஆட்டோ டிரைவர்.. பெங்களூரில்
பெங்களூர்: பெங்களூரில் 100 ரூபாய் பேரம் பேசிவிட்டு 3 ஆயிரம் கொடுத்தால்தான் மேற்கொண்டு போக முடியும் என நடு வழியில் ஆட்டோவை நிறுத்தி ஒடிசாவை சேர்ந்த இரு இளைஞர்களிடம் தகராறு செய்த ஆட்டோ டிரைவர், ஒரு பயணியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணியை ஆட்டோ டிரைவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பம் பற்றிய விவரம் வருமாறு:-

வட மேற்கு பெங்களூரில் உள்ள ஹெக்கனஹல்லி பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் அஷ்வத் (வயது 27). இவரது ஆட்டோவில் நேற்று முன் தினம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆவோத் மற்றும் ஆயோப் ஆகிய இரு சகோதரர்கள் பயணம் செய்தனர். பெங்களூரில் உள்ள சந்திரபுராவில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்து இருந்த ஒடிசா சகோதரர்கள் இருவரும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்.
ரயிலில் டிக்கெட் புக் செய்து இருந்ததால் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திற்கு சந்திரபுராவில் இருந்து மெஜெஸ்டிக் வரை பஸ்சில் வந்தனர். பிறகு அங்கு இருந்து யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். அப்போதுதான் ஆட்டோ ஓட்டுநரான அஷ்வத்தை அணுகியுள்ளனர். 5 கி.மீ தொலைவு கொண்ட தூரத்திற்கு ரூ.100 தருவதாக பேரம் பேசிய பிறகு அஷ்வத் ஒப்புக்கொண்டர்.
இதையடுத்து ஆட்டோவில் ஒடிசா சகோதரர்கள் இருவரும் ஏறி பயணம் செய்துள்ளனர். ராஜாஜிநகர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென ஆட்டோவை நிறுத்திய அஷ்வத், ஒருவருக்கு ரூ.1,500 என மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் வாடகை தர வேண்டும் இல்லாவிட்டால் மேற்கொண்டு செல்ல முடியாது என ஆட்டோவை நிறுத்தியதாக தெரிகிறது.
நடுவழியில் திடீரென கூடுதல் கட்டணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆவுத் மற்றும் ஆயோப் ஆட்டோ டிரைவரான அஷ்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கை கலப்பாகியுள்ளது. அப்போது அஷ்வத், ஆவோத்தை மூர்க்கத்தனமாக தாக்கியிருக்கிறார். காப்பாற்ற வந்த ஆயோப்பையும் அடித்து உதைத்துள்ளார். அஷ்வத் அடித்ததில் நிலை குலைந்த ஆவோத் அங்கேயே நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.
பயணிகளை ஆட்டோ டிரைவர் அடித்து உதைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசர் ஆவோத்-தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே ஆவோத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் அஷ்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆட்டோவில் பயணிக்க கூடுதல் கட்டணம் கேட்டு நடு வழியில் பயணியை அடித்து ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications