”டேட்டிங் போகலாம் வா..” அழைத்த கவிப்பிரியா.. பெங்களூர் லாட்ஜில் என்ஜினீயருக்கு நேர்ந்த அதிர்ச்சி
பெங்களூர்: ஆன்லைன் ஆப்பில் அறிமுகம் ஆன கவிப்பிரியா என்ற பெண்ணுடன் டேட்டிங் செல்ல நினைத்த கம்ப்யூட்டர் என்ஜினியருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு கிடைத்துள்ளது. ஆசை வார்த்தை கூறி நள்ளிரவில் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்ற கவிப்பிரியா போதை மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து மயக்கமடைய செய்து ரூ.6.75 லட்சம் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்.
"டேட்டிங் போகலாம் வா.." என ஆன்லைன் ஆப்பில் அறிமுகம் ஆன பெண் அழைத்ததால், சபலம் அடைந்து சென்று தங்க நகைகளை இழந்துள்ள கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி ரூ.6.75 லட்சம் தங்க நகைகளோடு எஸ்கேப் ஆன பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெங்களூர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
ஆன்லைன் ஆப்பில் அறிமுகம் ஆகும் பெண்களை நம்பி பணத்தை இழக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. பெண்களுடன் பேசி பழகலாம் என அந்த ஆப்பில் வரும் எண்களை நம்பி சிலர் ஏமாந்து போய் வருகிறார்கள். ஏமாறுவது மட்டும் இன்றி நகை, பணங்களையும் இழக்கிறார்கள்.
மோசடிகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. மோசடி செய்ய வேண்டுமெனில் ஒருவரது ஆசையை தூண்ட வேண்டும் என்பது போல, டேட்டிங் செய்யலாம், வாங்க பழகலாம் என கூறி சில பெண்கள் இப்படி பண மோசடி செய்து வருகிறார்கள். அப்படித்தான் பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினியரிடம் 6.75 லட்சம் நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது.
டேட்டிங் ஆப்பில் அறிமுகமான இளம்பெண்
பெங்களூர் நாகசந்திராவில் உள்ள தங்கம் விடுதியில் வசித்து வருபவர் 26 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஆன்லைன் ஆப் பயன்படுத்தி வந்துள்ளார். இதில் 'ஹாப்ன்' என்ற டேட்டிங் செயலி மூலமாக கவிப்பிரியா என்ற இளம்பெண் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆகியிருக்கிறார். இருவரும் செல்போனில் கடந்த இரு மாதங்களாக பேசி வந்துள்ளனர்.
எப்போது தான் நாம் நேரில் சந்திப்போம் என கவிப்பிரியா கேட்டு இருக்கிறார். வாங்க டேட்டிங் போகலாம் என கேட்டிருக்கிறார். இவரும் சரி ஓகே. நேரில் சந்திப்போம் என்று சொல்லி கடந்த 1 ஆம் தேதி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இருக்கிறார்கள். இந்திராநகரில் உள்ள ஒரு உணவகத்தில் இருவரும் முதன் முதலாக சந்தித்துள்ளனர்.
நள்ளிரவில் தண்ணீர் கொடுத்த கவிப்பிரியா
முதல் சந்திப்பின் போதே இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். இரவு நேரம் ஆகிவிட்டதால், நைசாக ஆசை வார்த்தை கூறிய கவிப்பிரியா அருகில் உள்ள ஆக்டேவ் கிரிஸ்டல் ஹைட்ஸ் தங்கும் விடுதிக்கு போகலாம் என கம்ப்யூட்டர் என்ஜினியரை அழைத்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக அந்த விடுதிக்கு சென்றனர்.
அன்று இரவு 2 பேரும் ஒன்றாக தங்கியுள்ளனர். அந்த சமயத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் கவிப்பிரியா ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது கம்ப்யூட்டர் என்ஜினியருக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் என கூறி குடிக்க கொடுத்து இருக்கிறார். அந்த தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
காலையில் கண் விழித்து பார்த்தால்..
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, கையில் அணிந்திருந்த தங்க செயினை காணவில்லை. உடனே திடுக்கிட்ட அவர் கவிப்பிரியாவை தேடினார். அவரையும் காணவில்லை. மேலும் தனது கழுத்தில் கிடந்த தங்க செயினையும் காணவில்லை. தங்க செயின் ரூ.3.22 லட்சம், கைச்செயின் ரூ.3.45 லட்சம், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஹெட்செட்டும் மாயமாகி இருந்தது.
ஆபாசமாக வீடியோ
எனவே கவிப்பிரியா தான் போதை மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்தார். இதையடுத்து அவர் சம்பவம் பற்றி இந்திராநகர் போலீசில் புகார் அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து வைத்திருக்கலாம் என்றும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கவிப்பிரியாவை தேடி வருகிறார்கள். டேட்டிங் செல்லும் ஆசையில் கம்ப்யூட்டர் என்ஜினியர் ரூ.6.75 லட்சம் நகைகளை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications