போலி தங்க நகைகளை அடகு வைத்து 11 கோடி மோசடி.. வங்கி ஊழியர் அருணாவால் அம்பலமானது எப்படி?
பெங்களூர்: கர்நாடகாவின் கடைக்கோடி மாவட்டமான ராய்ச்சூர் தெலுங்கானா எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டம் ஆகும். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி மீ தூரத்திலும், பெங்களூரில் இருந்து சுமார் 400 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள பகுதி தான் ராய்ச்சூர். இங்கு மகாராஷ்டிரா வங்கி செயல்படுகிறது. இங்கு போலி தங்க நகைகளை அடகு வைத்து 11 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்கள்.இது தொடர்பாக மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
தங்கத்தின் விலை இன்றைக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 1500 ரூபாயை தாண்டி உயர்ந்துள்ளது. சுமார் 67000 ரூபாய் என்கிற அளவில் ஒரு பவுன் தங்க நகை விற்பனையாகிறது. தங்க நகை விலை மிக கடுமையாக உயர்ந்து வருவதால், அதை அடகு வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

தங்க நகை அடகு
ஆனால் தங்க நகை அடகு வைப்பதை பொறுத்தவரை சில மேலாளர்கள் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்வது நடக்கிறது. சில இடங்களில் நகை மதிப்பீட்டாளர்களும் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள். கர்நாடகாவின் ராய்ச்சூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஆய்வு செய்வார்கள்
தெலுங்கானா எல்லையை ஒட்டி உள்ள கர்நாடகாவின் கடைக்கோடி மாவட்டமான ராய்ச்சூர் டவுன் பகுதியில் மகாராஷ்டிரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக 48 வயதாகும் நரேந்திர ரெட்டி என்பவர் பணியாற்றி வருகிறார். வங்கிகளில் பொதுவாக பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மண்டல அதிகாரிகள் அந்த வங்கியில் ஆய்வு செய்வார்கள். அப்படி ஆய்வு செய்யும் போது தங்க நகைகள் போலியா அல்லது ஒரிஜினலா என்பதையும் ஆய்வு செய்வார்கள்.
11 கோடி மோசடி
பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்வது வழக்கம். அப்படி மண்டல மேலாளர் சுசேத், கணக்குகளை தணிக்கை செய்தார். அடகு வைக்கப்பட்ட நகைகளையும் சரிபார்த்தார். அப்போது வாடிக்கையாளர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.11 கோடி கையாடல் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.
வங்கி மேலாளர் தலைமறைவு
இதுபற்றி மகாராஷ்டிரா வங்கியின் மண்டல மேலாளர் சுசேத் ராய்ச்சூர் டவுன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வங்கி மேலாளர் நரேந்திர ரெட்டி மீது சந்தேகம் அதிகரித்தது. அவரிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர் தலைமறைவானார்.
எப்படி நடந்தது
அதை தொடர்ந்து ராய்ச்சூர் போலீசார் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து விசாரித்தனர். அப்போது 105 போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் 29 வங்கி கணக்குகளில் போலி தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.11 கோடி கடன் வாங்கியது போல் மோசடி செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
வங்கி ஊழியர் அருணா
அந்த பணம் எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது ஆகிய விவரங்களை போலீசார் சேகரித்தார்கள். அப்போது ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த அருணா என்ற வங்கி ஊழியர் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர் இதையடுத்து நரேந்திர ரெட்டி மற்றும் அருணாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
80 லட்சம் பறிமுதல்
கைதான 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.80 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள பணத்தை மீட்பது தொடர்பாக போலீசார் அவர்களின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி தங்க நகைகளை அடகு வைத்து கடன் மோசடி செய்வதும் ஆங்காங்கே வங்கிகளில் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications