அசத்தி காட்டிய பெங்களூர் விமான நிலையம்.. நேரம் தவறாமையில் முதலிடம்! சென்னைக்கு இரண்டாமிடம்
பெங்களூர்: நேரம் தவறாமல் செயல்பட்டிருக்கும் விமான நிலையங்களில் பட்டியலை விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் வெளியிட்டிருக்கிறது. இதில் முதலிடத்தில் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும், இரண்டாவது இடத்தில் சென்னை விமான நிலையமும் இடம் பிடித்திருக்கிறது.
சிரியம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 92.35% அளவுக்கு நேரந்தவறாமை செயல்திறனுடன் இயங்கியிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. மட்டுமல்லாது 105 வழித்தடங்களில் 38 விமான நிறுவனங்களுடன் இந்த விமான நிலையம் இயங்கியது. ஜூலை மாதத்தில் 92.35% விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட்டன, 86.10% விமானங்கள் சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததாகவும் சிரியம் கூறியிருக்கிறது.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2.19 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது.
நேரம் தவறாமல் செயல்பட்டிருக்கும் விமான நிலையங்களில் பட்டியலில், பெரிய விமான நிலையப் பிரிவில் சென்னை சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன் நேரந்தவறாமை புறப்பாடு 87.35% ஆகவும், சரியான நேர வருகை 82.39% ஆகவும் இருந்தது. சென்னை விமான நிலையம் 66 வழித்தடங்களில் 38 விமான நிறுவனங்களுடன் சேவை வழங்கியது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் தவிர, மேலும் மூன்று இந்திய விமான நிலையங்கள் பெரிய பிரிவில் முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ளன. கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது இடத்தையும், ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பத்தாவது இடத்தையும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 14வது இடத்தையும் பிடித்தன.
நடுத்தர விமான நிலையப் பிரிவில் அகமதாபாத் விமான நிலையம் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. சிறிய விமான நிலையப் பிரிவில் ஸ்ரீநகரின் ஷேக்-உல்-ஆலம் சர்வதேச விமான நிலையம் 11வது இடத்தையும், புனே சர்வதேச விமான நிலையம் 16வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒவ்வொரு மாதமும், சிரியம் உலகளவில் சுமார் 30 லட்சம் விமானங்களின் மொத்த எண்ணிக்கையை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்கிறது. விமான நிலையங்கள், அவற்றின் காத்திருப்பு இருக்கை திறன் மற்றும் 90% அல்லது அதற்கு மேற்பட்ட சரியான நேர புறப்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
